Tuesday, June 29, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 17.06.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இத்தாலியில் திருத்தந்தை புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார்

ஜூன்17,2010 இத்தாலியில் 2009ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Abruzzi பகுதிக்கு வரும் ஜூலை மாதம் திருத்தந்தை சென்று அங்குள்ள புனித ஐந்தாம் செலெஸ்தின் என்ற திருத்தந்தையின் புனித பண்டங்களுக்கு வணக்கம் செலுத்துவார் என்று திருப்பீட பத்திரிக்கை அலுவலகம் கூறுகிறது.
13ம் நூற்றாண்டில் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாம் செலெஸ்தின், ஐந்து மாதங்களே திருத்தந்தையாக இருந்த பின்னர் அந்தப் பொறுப்பைத் துறந்து, ஒரு துறவியாக வாழ்நாட்களைக் கழித்தார் என்பது வரலாறு.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Abruzzi பகுதியில் உள்ள L’Aquila நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அந்தப் பகுதிக்கு அவ்வாண்டு ஆகஸ்ட் மாதமே சென்றதோடு, அந்த ஆண்டை புனித செலெஸ்தின் ஆண்டாக அறிவித்தார். இந்த ஜூபிலி ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வருவதையொட்டி, திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.
திருத்தந்தை மே மாதம் தொரினோவுக்கு மேற்கொண்ட பயணம் உட்பட, இவ்வாண்டு இத்தாலியின் நான்கு இடங்களுக்கு மெய்ப்புப் பணிக்கான திருப்பயணங்களை மேற்கொள்வார் என்று இச்செய்திக்குறிப்பு மேலும் கூறுகிறது.


“இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கையை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது

ஜூன்17,2010 “இரத்தமயமான ஞாயிறு” குறித்த அறிக்கை, அச்சம்பவம் நிகழ்ந்து 38 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்பதாக அயர்லாந்து ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
1972ம் ஆண்டு சனவரி 30 ஞாயிறன்று, மக்கள் உரிமைக்கான போராட்டத்தில், அமைதியான முறையில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மேல் பிரித்தானியப் படையினர் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
எவ்வித காரணமும் இன்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்த விசாரணை 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இச்செவ்வாயன்று நிறைவு பெற்றது. விசாரணையின் முடிவில் வெளியான இந்த அறிக்கையில், பிரித்தானிய படைவீரர்களின் செயல் கண்டனத்திற்குரியது எனத் தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசின் சார்பாக, பிரதம மந்திரி David Cameron இச்செவ்வாயன்று மக்களவையில் மன்னிப்பு கேட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
இவ்வறிக்கை வெளியான செவ்வாய்க் கிழமையை செபத்தில் கழித்த அயர்லாந்து ஆயர்கள், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும், சிறப்பாக இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த, காயப்பட்ட நம் சகோதரர்கள் அனைவரையும் நம் மனதிலும், செபத்திலும் தொடர்ந்து நினைவுக் கூர்வோம் என்று தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.


இயேசு சபைக் குரு எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது

ஜூன்17,2010 இயேசு சபைக் குரு Gaston Roberge எழுதிய இந்திய திரைப்படங்கள் குறித்த புதியதொரு புத்தகம் இச்செவ்வாயன்று கொல்கொத்தாவில் வெளியிடப்பட்டது.
"The Indian Film Theory: Flames of Sholay, Notes and Beyond" என்ற தலைப்பில் வெளியான இந்தப் புத்தகத்தை, திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட வல்லுனர்கள், விமர்சனையாளர்கள் என அனைவரும் புகழ்ந்துள்ளனர்.
இந்தியாவுக்கே உரித்தான திரைப்பட கோட்பாடுகளை உலகறியச் செய்யும் வகையில் இந்தப் புத்தகம் அமைந்துள்ளதென வங்காளத் திரைப்பட தயாரிப்பாளரும், அறிஞருமான Ashok Vishwanathan கூறினார்.
இன்றைய இந்தியாவில் மக்களிடையே பெரும் வரவேற்பு பெறும் திரைப் படங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த இந்திய நாட்டிய சாஸ்திரங்களில் காணக்கிடக்கின்றன என்று இப்புத்தகத்தின் ஆசிரியர் இயேசு சபைக் குரு Gaston Roberge கூறினார்.
‘சித்ரபானி’ என்ற தொடர்பு சாதன மையத்தை கொல்கொத்தாவில் உருவாக்கியதோடு, திரைப்படங்கள் குறித்து 25 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள குரு Gaston Roberge, iPod கலாச்சாரம் பெருகியுள்ள இந்தக் காலக் கட்டத்திலும், திரைப்படங்கள் இன்னும் மக்களிடையில் அழியாது என்று கூறினார்.


இளம் குருவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் ஆயர்

ஜூன்17,2010 குருக்கள் ஆண்டின் நிறைவையொட்டி வெளி வந்துள்ள "The Last Summit" என்ற திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் ஸ்பெயின் நாட்டின் San Sebastian மறை மாவட்ட ஆயர் Jose Ignacio Munilla.
மலையேறும் முயற்சியில் ஓராண்டுக்கு முன் இறந்த இளம் குரு Pablo Dominguezஐ மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படம், குருத்துவம் குறித்த வாடிக்கையான, தவறான எண்ணங்களைச் சரி செய்யும் வகையில் வெளி வந்துள்ள ஒரு திரைப்படம் என்று ஆயர் Munilla கூறினார்.
குருக்களையும், குருத்துவத்தையும் பற்றி அண்மையில் எழுந்துள்ள பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், குருத்துவத்தின் மாண்பை நிலைநிறுத்தும் இது போன்றதொரு திரைப்படம், அதுவும் குருக்கள் ஆண்டு நிறைவாகும் இந்த நேரத்தில் வெளி வந்திருப்பது பொருத்தமானதே என்று ஆயர் மேலும் கூறினார்.
“இன்றையக் காலக் கட்டத்தில் ஒரு குருவை சிலுவையில் நீ அறைந்தால், இந்த உலகம் உன்னைப் பாராட்டும்; மாறாக, ஒரு குருவை நீ பாராட்டினால், இந்த உலகம் உன்னைச் சிலுவையில் அறையும்” என்று இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் முன்னுரையாகப் பேசியிருப்பது திரைப்படத்தின் அழகான ஓர் ஆரம்பம் என்று ஆயர் Munilla கூறினார்.
ஆவணப் படத்தின் நாயகனான Pablo Dominguezன் விசுவாசம், தாழ்ச்சி, தாராள மனம், பணியில் அவர் கொண்டிருந்த தளராத ஆர்வம் இவை எல்லாம் பலர் மனதிலும் மேலான எண்ணங்களை விதைக்கும் என்று ஆயர் Jose Ignacio Munilla தெரிவித்தார்.


மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதென காரித்தாஸ் அமைப்பு கூறியுள்ளது

ஜூன்17,2010 மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு கோடி மக்கள் பட்டினியால் மடியும் அபாயம் உள்ளதால், உலக நாடுகள் இந்த உணவு பற்றாக்குறையை நீக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென காரித்தாஸ் அமைப்பு இப்புதன் கிழமை விண்ணப்பித்துள்ளது.
Chad, Mali, Burkina Faso ஆகிய நாடுகளில் உணவு பற்றாக்குறை இருந்தாலும், Niger பகுதியே மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இங்கு 80 லட்சம் மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் இப்பகுதியின் காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro கூறியுள்ளார்.
இந்த உணவு பற்றாக் குறை 2005ம் ஆண்டு ஏற்பட்ட குறையை விட அதிக அளவானது என்றும், இந்தப் பற்றாக் குறையால் மிக அதிகமாய் பாதிப்புக்கு உள்ளாகப் போவது குழந்தைகளே என்றும் Raymond Yoro மேலும் கூறினார்.
இந்த நெருக்கடி நிலை குறித்த எச்சரிக்கைகள் சென்ற ஆண்டு டிசம்பரிலேயே விடுக்கப்பட்டாலும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் உலக நாடுகள் தாமதமாகச் செயல் படுகின்றன என்ற தன் வருத்தத்தையும் தெரிவித்தார், காரித்தாஸ் அமைப்பின் செயலர் Raymond Yoro.


சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை – ஐ.நா. உயர் மட்ட அதிகாரிகள்

ஜூன்17,2010 சிறுவர் சிறுமிகளை வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துதல், அல்லது போர்ச் சூழ்நிலையில் அவர்களைப் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குதல், அவர்களது உடலுக்கும், உயிருக்கும் ஊறு விளைவித்தல் ஆகிய வன்முறைகளில் ஈடுபடும் அமைப்புகள், குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடம் அந்நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் சென்ற மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமேரிக்கா ஆகிய நாடுகளில் சிறுவர், சிறுமிகளை போர் படையில் ஈடுபடுத்தும் 16 குழுக்களை அடையாளப்படுத்தினார்.
இந்தக் குழுக்களைப் பல வழிகளிலும் கட்டுப் படுத்தும், அல்லது தடை செய்யும் பொறுப்பு அரசுகள் மற்றும் பல்வேறு உலக நிறுவனங்களுக்கு உண்டு என்று ஐ.நா.பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதியான ராதிகா கூமாரஸ்வாமி கூறினார்.
கடந்த ஒரு வாரமாக மத்திய அப்பரிக்காவின் ஆறு நாடுகளிடையே சிறார் படைவீர்கள் குறித்து நடந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துள்ள இந்த வேளையில், ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவிடமிருந்து வந்துள்ள இந்த கோரிக்கை குறிப்பிடத் தக்கது.


முல்லைதீவுப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ

ஜூன்17,2010 ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ இப்புதன்கிழமை இலங்கையின் முல்லைத்தீவு பகுதிக்கு வருகை தந்தார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், அங்கு நடைபெறுகின்ற மறுசீரமைப்பு மற்றும் முன்னேற்றப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசினார்.
வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன், குமாரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ, இலங்கை அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேசியுள்ளார்.

No comments:

Post a Comment