வத்திக்கான் வானொலி – செய்திகள்
21.07.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------
1. இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ
2. ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne
3. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்
4. தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு
5. கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு
6. திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
----------------------------------------------------------------------------------------------------------------
இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் - கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ
ஜூலை21,2010 இத்தாலி நாடு தற்போது சந்தித்து வரும் கலாச்சார ஆபத்தை எதிர்கொள்ள கத்தோலிக்க அரசியல் வாதிகள் முன் வர வேண்டும் என்று வத்திக்கான் செய்தித்தாளான L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டியொன்றில் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் ஆஞ்செலோ பஞாஸ்கோ (Bagnasco) கூறினார்.
சமுதாயப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலைக்குரிய போக்கு என்றுரைத்த கர்தினால் பஞாஸ்கோ, பிறரன்பு என்பதில் விசுவாசம் கொண்டுள்ள கத்தோலிக்கர்கள் முன் வந்து இந்த நிலையை மாற்றவேண்டும் என்றும், சிறப்பாக அரசியலில் இத்தகையோர் ஈடுபடுவது இத்தாலியின் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் கூறினார்.
சமுதாய மாற்றங்கள் பலவும் மனிதர்களின் முயற்சியால் வரக்கூடியது, மனித முயற்சிகளை மீறிய மாற்றங்களுக்கே இறைவன் துணையைத் தேட வேண்டுமென கத்தோலிக்கத் திருச்சபை மனித சமூகத்தைப் பற்றி பல ஏடுகளில் கூறியுள்ள கருத்துக்களைச் சுட்டிக் காட்டிய கர்தினால் பஞாஸ்கோ, இன்றைய சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகள் காண அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் சுட்டிக் காட்டினார்.
ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாது - கர்தினால் Juan Cipriani Thorne
ஜூலை21,2010 ஒரே பாலினத் திருமணங்களைச் சட்டமாக்கிய அர்ஜென்டீனாவைப் போல், பெரு நாடு மாறிவிடக் கூடாதென Lima உயர்மறைமாவட்டப் பேராயர் கர்தினால் Juan Cipriani Thorne கூறியுள்ளார்.
கடந்த வாரம் அர்ஜென்டீனா அரசு மேற்கொண்ட முயற்சி கண்டனத்திற்குரியதென சுட்டிக்காட்டிய கர்தினால் Cipriani, தொடர்ந்து நடைபெறவிருக்கும் பெரு நாட்டின் தேர்தல் பிரச்சாரங்களில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டமாக்கும் கருத்து இடம் பெறக் கூடாதென்ற அழைப்பையும் விடுத்தார்.
எந்த ஒரு பொது நல ஊழியரும் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்பவராக இருக்க வேண்டுமேயொழிய தங்கள் சுய கருத்துக்களையும், சுய நலனையும் மக்கள் மீது திணிக்கக் கூடாதென்றும் கர்தினால் Cipriani மேலும் கூறினார்.
பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய முஸ்லீம் தலைவர் கண்டனம்
ஜூலை21,2010 தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது குறித்தத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய முஸ்லீம் தலைவர் Asghar Ali Engineer.
இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் கொல்லப்பட்டது கொடூரமானக் குற்றம் மற்றும் இத்தகைய குற்றச் செயல்கள் பாகிஸ்தானில் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன என்றுரைத்த மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, தேவநிந்தனைத் தடைச் சட்டங்களைத் தான் முழுமையாய் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.
தேவநிந்தனைத் தடைச்சட்டம் பற்றிக் குரானில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றுரைத்த Engineer, பாகிஸ்தானில் இந்தச் சட்டம் சிறுபான்மை கிறிஸ்தவர்க்கெதிராகத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்றார்.
பாகிஸ்தானில் தேவநிந்தனைத் தடைச்சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 35 வயது ரஷித் இம்மானுவேல், 30 வயது சஷித் மாசிக் இம்மானுவேல் ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்கள் இத்திங்களன்று ஃபாய்சலாபாத் நீதிமன்றத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மேலும், இதேமாதிரியானக் குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கேரளாவில் முஸ்லீம்களால், கிறிஸ்தவப் பேராசிரியர் T.J.Joseph என்பவரின் கை துண்டிக்கப்பட்தையும் குறிப்பிட்டுப் பேசிய, மும்பை சமூக மற்றும் சமயச்சார்பற்ற ஆய்வு மையத் தலைவர் Engineer, இத்தகைய வன்முறைகளைத் எத்தகைய கடும் சொற்களால் எதிர்க்க முடியுமோ அத்தகைய வார்த்தைகளால் தான் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
தென் கொரியாவின் ‘நான்கு நதி திட்டத்’திற்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு
ஜூலை21,2010 தென் கொரியாவிலுள்ள நான்கு நதிகளையும் சீரமைக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அந்நாட்டின் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென் கொரிய ஆயர் பேரவை, கொரிய நாட்டு கிறிஸ்தவ சபைகளின் குழு, Won புத்த மதக் குழு என பல்வேறு மதக் குழுக்கள் இணைந்து நடத்தும் இந்த போராட்டங்களின் ஒர் அங்கமாக, இத்திங்களன்று Seoulன் Myeongdong பேராலயத்தில் திருப்பலி ஒன்று நடந்ததென்றும், அந்தத் திருப்பலியில் 2000க்கும் மேற்பட்ட குருக்களும் விசுவாசிகளும் கலந்து கொண்டனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘நான்கு நதி திட்டம்’ என்ற இந்த முயற்சியால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் குடிநீர் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உருவாகும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு அமைப்பின் செயலர் அருள்திரு Yang Jae-seong கூறினார்.
இதுவரை இந்தத் திட்டத்திற்கு 1800 கோடி டாலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு
ஜூலை21,2010 கருணைக் கொலையைச் (Euthanasia) சட்டமாக்க வேண்டும் என்று பிரிட்டனில் இச்செவ்வாயன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வழக்கிற்கு எதிராக No Less Human அதாவது, ‘மனிதப் பிறவிகளை விடக் குறைந்தவர்கள் இல்லை’ என்ற அமைப்பு தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
54 வயதான Tony Nicklinson ஐந்து ஆண்டுகளுக்கு முன் முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டார் என்றும், சக்கர நாற்காலியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தன் வாழ்வைச் செலவிடும் Nicklinson, கருணைக் கொலை மூலம் தன் வாழ்வை முடித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் மனு செய்துள்ளார் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
உடல் குறையுள்ள மனிதர்கள், கருணைக் கொலை மூலம் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ள அவர்கள் விரும்பினாலும், இந்த முறை சட்டமாக்கப்படுவதோ, அரசால் அனுமதிக்கப்படுவதோ மனித குலத்திற்கு எதிரான ஒரு செயல்பாடு என்று No Less Human குழுவின் உறுப்பினரான Janet Thomas கூறினார்.
உடல் அளவில் எந்த நிலையில் இருந்தாலும், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்பதை வலியுறுத்துவதே No Less Human என்ற தங்கள் குழுவின் நோக்கம் என்று Janet Thomas மேலும் கூறினார்.
திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
ஜூலை21,2010 திருத்தந்தையின் கருத்துக்களுக்கேன்று பத்து லட்சம் செபங்கள் அடங்கிய ஆன்மீக மலர்கொத்து ஒன்று வத்திக்கானுக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதென அமெரிக்க ஐக்கிய நாட்டின் திருப்பீடத் தூதுவர் கூறினார்.
தொடர்பு சாதனங்கள் திருத்தந்தை மீது தவறான பல தகவல்களை வெளியிட்டுவந்த வேளை, அவருக்குத் தங்கள் ஆதரவைக் காட்டும் வண்ணம் இவ்வாண்டு புனித வாரத்தில் இந்த முயற்சி ஆரம்பமானதென்று, நியூ யார்க் உயர்மறைமாவட்ட பேராயர் Timothy Nolan கூறினார்.
புனித வாரம் முதல் தூய ஆவிப் பெருவிழாவரையில் சேகரிக்கப்பட்ட இந்த ஆன்மீக மலர்கொத்தில் 24,714 திருப்பலிகளும், 31,847 உண்ணா நோன்பு முயற்சிகளும், 44,357 நற்கருணை வழிபாடுகளும் அடங்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
‘நன்றாக வாழ்’ என வாழ்த்தும் கை தான் வாழ்க்கை
வத்திக்கான் வானொலி – செய்திகள்
20.07.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் வேண்டுகோள்
ஜூலை 20, 2010. பாகிஸ்தானில் இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களைக் கொலை செய்தவர்கள் நீதி விசாரணையின்முன் நிறுத்தப்படுமாறு ஃபாய்சாலபாத் ஆயர் ஜோசப் கூட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஃபாய்சாலபாத்தில் இத்திங்களன்று இரண்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதையடுத்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களுக்கிடையே உருவாகியுள்ள பதட்ட நிலைகளில் கிறிஸ்தவ ஆலயம் சூறையாடப்பட்டது மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. மேலும், உள்ளூர் மசூதிகள் ஒலிபெருக்கிகள் மூலம் இத்தகைய வன்முறைக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்புகளைக் கூறிவந்தன என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
Rashid Emmanuel, Sajid Masih Emmanuel ஆகிய இரண்டு கிறிஸ்தவ சகோதரர்களும் இறைவாக்கினர் முகமதுக்கு எதிரான வார்த்தைகளை எழுதினார்கள் என்று குற்றம் சாட்டப்ப்டடு இம்மாதம் இரண்டாம் தேதி கைது செய்யப்பட்டனர். எனினும், அந்த எழுத்துக்கள் இவர்களுடையது அல்ல என்று நிரூபணமானதால் இவர்கள் இத்திங்களன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு நிரபராதிகள் என விடுவிக்கப்படவிருந்தனர். இவ்விருவரது கைகளும் சேர்த்து விலங்கு மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே இவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சகோதரர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதற்கொண்டு இவர்கள் கொல்லப்பட வேண்டுமென்று ஃபாய்சலாபாத் முஸ்லீம் மதக் குருக்கள் அம்மதத்தின் விசுவாசிகளைத் தூண்டி வந்தனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இச்சகோதரர்களின் அடக்கச் சடங்குத் திருப்பலி அந்நகர் புனிதர்கள் பேதுரு பவுல் பேராலயத்தில் இச்செவ்வாயன்று நடைபெற்றது.
பாகிஸ்தான் கிறிஸ்தவர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள்விடுத்த ஆயர் கூட்ஸ், உண்மையான குற்றவாளிகள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்படுமாறும் தேவநிந்தனைத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்னும், இக்கொலை குறி்தது கருத்து தெரிவித்த தொமினிக்கன் சபை அருள்தந்தை பாஸ்கால் பவுலுஸ், இந்தச் சகோதரர்களுக்கு அதிகப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு தலத்திருச்சபை வற்புறுத்தி வந்தது என்றும் இத்தகைய வன்முறைச் செயலைத் தாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
இவ்வன்முறையைத் தொடர்ந்து, காரித்தாஸ் தலைமையகம் உட்பட திருச்சபை அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பல கிறிஸ்தவர்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாக அறுபது முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
மேலும், கத்தோலிக்கர் இசுலாமியக் கோட்பாடுகள் குறித்து விவாதிக்கவும் அம்மதத்தைப் பற்றிப் பேசவும் வேண்டாமெனக் கேட்டுள்ள கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள், இசுலாத்தை மதித்து சகிப்புத்தன்மையைக் கடைபிடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பாவில் சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்து வருகிறது - திருப்பீடம்
ஜூலை 20, 2010. ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பிற பிரச்னைகள் உட்பட சமூக சமத்துவமின்மைகள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் வளர்ந்து வருவதாகத் திருப்பீடம் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் எச்சரித்தது.
ஐரோப்பிய அவை, ஐரோப்பிய பாராளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தலைவர்கள், 24 ஆயர்கள், யூதமதத்தின் முக்கிய ராபிகள், முஸ்லீம்மதக் குருக்கள், இந்து மற்றும் சீக்கிய சமூகங்களின் பிரதிநிதிகள் இணைந்து “ஏழ்மை மற்றும் சமூகப் புறக்கணிப்பு” குறித்து பெல்ஜிய நாட்டு பிரசல்ஸ்ஸில் நடத்திய ஒருநாள் கூட்டத்தில் உரையாற்றிய நீதி மற்றும் அமைதிக்கானத் திருப்பீட அவையின் நேரடிப் பொதுச் செயலர் Flaminia Giovanelli இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது கவலை தருவதாக இருக்கும் அதேவேளை, பணக்காரருக்கும் ஏழைகளுக்குமிடையேயான வேறுபாடுகளும் அதிகரித்து வருகிறது மற்றும் இது துர்மாதிரிகையாகவும் இருக்கின்றது என்று Giovanelli கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமார் எட்டு கோடியே ஐம்பது இலட்சம் மக்கள் அதாவது 17 விழுக்காட்டு மக்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் கடும் வறுமையில் வாழ்கின்றனர், இது மதிப்பீடுகளின் அமைப்புமுறை பிரச்னையாகத் தென்படுகின்றன என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
ஐரோப்பாவில் ஒருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது, மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து வருவதையும் சுட்டிக்காட்டிய ஜோவனெல்லி, எட்டு விழுக்காட்டு ஐரோப்பிய தொழிலாளர்களுக்குப் போதுமான ஊதியம் கிடைக்கவில்லை என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
மக்கள் தொகை பெருக்கம் குறித்த அரசு அறிக்கையை இந்தியத் திருச்சபை வரவேற்றுள்ளது
ஜூலை 20, 2010. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற அரசு அறிக்கையை வரவேற்றுள்ளது தலத்திருச்சபை.
இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி ஆண்டுக்கு 1.5 விழுக்காடு வீதம் இருந்து வருகிறது. மக்கள் தொகை தற்சமயம் ஏறத்தாழ 120 கோடியாக இருக்கின்றது, இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள் சீனாவை மிஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய நலவாழ்வு அமைச்சர் குலாம் நபி அசாட், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதக் கடுமையான முறைகளையும் அரசு பயன்படுத்தப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
இவ்வறிக்கையை வரவேற்றுள்ள இந்திய ஆயர் பேரவையின் குடும்ப ஆணையத் தலைவர் ஆயர் ஆக்னெல்லோ கிரேசியஸ், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் சில முறைகள் வெளிப்படையாகத் தெரியவில்லையெனினும் அவை நாட்டில் இடம் பெற்று வருகின்றன என்றார்.
உலகின் பல நாடுகளில் போதுமான மக்கள் இல்லை என்ற பயமும் பிறப்பு விகிதமும் குறைவாகவே இருந்து வருகிறது, இந்த நிலை இந்தியாவில் நுழையாது என்று நம்புவோம் எனவும் கருத்து தெரிவித்தார் ஆயர் கிரேசியாஸ்.
நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டுமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு
ஜூலை20,2010. நேபாள அரசியலில் கிறிஸ்தவர்கள் ஆண்டுக்கணக்காய் ஓரங்கட்டப்பட்டுள்ள வேளை, கிறிஸ்தவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டுமாறு அந்நாட்டு கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த ஜூன் 30ம் தேதி நேபாள பிரதமர் மாதவ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து அந்நாடு அரசு இன்றி இருக்கின்றது. எனினும் இப்புதன் கிழமைக்குள் புதிய அரசை அமைக்குமாறு அரசுத்தலைவர் ராம் பரன் யாதவ் நாடாளுமன்றத்தைக் கேட்டுள்ளார்.
நேபாளத்தின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்துப் பேசிய காத்மண்ட் ஆயர் அந்தோணி ஷர்மா, கடந்த காலத்தில் கத்தோலிக்கர் அரசியலில் ஆர்வம் காட்டியதைத் தான் பார்த்ததே இல்லை, எனினும் இந்நாள்வரை எந்தத் தலைவரும் மக்கள் நலனில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதில்லை, எனவே கிறிஸ்தவர்கள் நேபாள அரசியலில் உயிரூட்டமுடன் செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது என்று கூறினார்.
இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்டவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன
ஜூலை20,2010 இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு அடித்தளமிட்ட அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் ஆகிய இருவரையும் கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன
இலங்கையில் கத்தோலிக்க இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் அருள்தந்தை கொன்சால்வெஸ் இறந்ததன் 270ம் ஆண்டு நிறைவு, அந்நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபை பரவுவதற்குக் காரணமானவராக நோக்கப்படும் முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் பிறந்ததன் 300வது ஆண்டு நிறைவு ஆகிய கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
அருள்தந்தை ஜாக்குமெ கொன்சால்வெஸ், முதல்முறையாக சமய நூல்களைத் தமிழிலும் சிங்களத்திலும் எழுதியவர். இதனால் உள்ளூர் மக்கள் கத்தோலிக்க விசுவாசத்தை ஏற்கவும் அதனைக் கற்கவும் முடிந்தது. மறைக்கல்வி ஏடு உட்பட சுமார் இருபது திருமறை நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
இலங்கை டச்சு காலனியாக இருந்த சமயம் கால்வனிசம் அத்தீவின் அதிகாரப்பூர்வ மதமாக இருந்தது. அச்சமயம் கத்தோலிக்கர் பரவலாக நசுக்கப்பட்டனர். அப்போது குருவாக இருந்த முத்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ், கத்தோலிக்கத் திருச்சபையை வலுப்படுத்தினார். 1651ம் ஆண்டு பிறந்த இவரை 1995ல் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் முத்திப்பேறுபெற்றவராக அறிவித்தார். சிலோனின் திருத்தூதர் என அழைக்கப்படும் இவர் பிறந்ததன் 300ம் ஆண்டு நிறைவு இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் கிறிஸ்துவ இளையோர் குழு கைபர் கணவாய்ப் பகுதியில் நடத்திய முகாம்
ஜூலை 20, 2010. பாகிஸ்தானிலுள்ள கிறிஸ்துவ இளையோர் குழு ஒன்று சுற்றுச்சூழல், மற்றும் மத நல்லிணக்கம் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகாம் ஒன்றை அண்மையில் நடத்தினர்.
சென்ற வாரம் மூன்று நாட்கள் இமய மலையின் கைபர் கணவாய்ப் பகுதியில், Saiful Muluk என்ற எரிக்கருகே நடத்தப்பட்ட முகாம் ஒன்றில் மருத்துவர், ஆசிரியர், மாணவர் என்று 86 இளையோர் கலந்து கொண்டு, மலைப்பகுதியில் உள்ள அந்த ஏரியில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் பல குப்பைகளை அகற்றினர்.
இயற்கையில் உள்ள குப்பைகளை அகற்றுவது சுற்றுச்சூழலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பது போல், சமூகத்தில் உள்ள பிரிவுகளை அகற்றும் போது, சமூகச் சூழலும் முன்னேற வாய்ப்புண்டு என்று இந்த முகாம்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக ஏற்பாடு செய்து வரும் STANCE என்ற குழுவின் தலைவரான Saqib Khadim கூறினார்.
மத அடிப்படைவாதம், சகிப்புத் தன்மையற்ற நிலை, பிரித்தாளும் அரசியல், ஏழ்மை இவைகளே நாட்டின் சமுதாயச் சூழலை அதிகம் பாதிக்கும் கூறுகள் எனவே, இவைகளையும் நீக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுப்பட்டுள்ளோம் என்று இந்த முகாமில் கலந்து கொண்ட மருத்துவத் துறை மாணவர் ஜென்னிபர் பஷீர் கூறினார்.
சிகிச்சை பெறும் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ளது
ஜூலை20,2010. HIV நோய்க் கிருமிகளுக்கானச் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 52 இலட்சமாக உயர்ந்துள்ள போதிலும், தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியினால் நன்கொடை வழங்கும் நாடுகளின் இதற்கான முயற்சிகள் மந்தமடைந்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை கூறுகின்றது.
எய்ட்ஸ் நோய்க்கானச் சிகிச்சைகள் திட்டமிடப்பட்டபடி இடம் பெற்றால் 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இதனால் ஏற்படும் இறப்புகளை இருபது விழுக்காடாகக் குறைக்க முடியும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயாளிகள் தங்கள் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல 50 சதவீத பேருந்து கட்டண சலுகையை ஆந்திர அரசு அறிவித்துள்ளது
இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் இளைஞர் மத்தியில் HIV நோய்க் கிருமிகள் அதிகமாகப் பரவி வருகின்றன என்றும் ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.
- பகிர்வதே பலுகும் -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment