வத்திக்கான் வானொலி – செய்திகள் 25.05.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குடியேற்றதாரர்க்கான திருப்பீட அவையின் பணிகள் திருத்தந்தையின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
மே 25, 2010. இடம் விட்டு இடம் பெயரும் மக்களுக்கான திருச்சபையின் பணி பங்குத்தள அளவிலும், மறைமாவட்ட அமைப்பு முறைகளிலும், ஆயர் பேரவைத் திட்டங்களிலும், பிற சர்வதேச அமைப்புகளுடனான திருச்சபையின் திட்டங்களிலும் தெளிவாகக் காணக்கிடப்பதாக எடுத்துரைத்தார் பேராயர் Antonio Maria VEGLIÒ.
குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறைக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Maria VEGLIÒ உரைக்கையில், தங்கள் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் மக்களைக் குறித்த திருத்தந்தையின் அக்கறையில் பங்குதளங்கள் முதல் கத்தோலிக்க சர்வதேச அமைப்புகள் வரை அனைத்தும் பங்கு கொள்கின்றன என்றார்.
குடிபெயர்தல் என்பதை அதன் ஏழ்மை நிலையிலும் துன்பங்களிலும் புரிந்துகொண்டு சேவையாற்றுவதையும், குடிபெயர்தலை புதிய நாட்டிற்கான மூலதனமாக நோக்கி அதற்கியைந்த சூழல்களை உருவாக்கிக் கொடுப்பதையும் திருச்சபையின் குடியேற்றதாரர்க்கான அவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் பேராயர்.
திருச்சபையின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவை தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளோடும், தனியார் நிறுவனங்களோடும், சுய உதவிக் குழுக்களோடும் இணைந்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறப்புப் பணியாற்றி வருகிறது எனவும் கூறினார் பேராயர் Maria VEGLIÒ .
இப்புதன் முதல் வெள்ளி வரை தன் 19வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவருகிறது குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறைக்கான திருப்பீட அவை.
கோங்கோ மற்றும் மொல்தோவா நாடுகளின் அரசுத்தலைவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.
மே 25, 2010. இத்திங்களன்று கோங்கோ மற்றும் மொல்தோவா நாடுகளின் தலைவர்கள் திருப்பீடத்தில் திருத்தந்தையை தனித்தனியே சந்தித்து அந்நாடுகளில் திருச்சபை ஆற்றி வரும் பணிகள் குறித்து விவாதித்தனர்.
இச்சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள திருப்பீடப் பத்திரிகைத்துறை, இரு நாடுகளின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்து திருத்தந்தை அவர்களுடன் விவாதித்ததாகவும் அதில் மனிதாபிமானப் பிரச்னைகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்தது. அனைத்துப் பிரச்னைகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்பதை கோங்கோ அரசுத்தலைவர் Denis Sassou Nguesso விடமும் Moldova அரசுத்தலைவர் Mihai Ghimpu விடமும் திருத்தந்தை வலியுறுத்தியதாகவும் திருப்பீடப் பத்திரிகைத்துறை மேலும் தெரிவித்தது.
கோங்கோ நாடு சுதந்திரம் பெற்றதன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் குறித்தும் திருத்தந்தையுடன் விவாத்தித்தார் அரசுத்தலைவர் நுகுயெஸ்ஸோ.
விமான விபத்தில் பலியான குடும்பங்களுக்கு உதவ இந்திய ஆயரின் திட்டம்.
மே 25, 2010. மங்களூர் விமான விபத்தினால் தன் மறை மாவட்டத்தில் பலியான 17 முதல் 18 பேரின் குடும்பங்களைத் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கான உதவிகளைச் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அப்பகுதி ஆயர்.
பங்குக் குருக்கள் மூலம் இக்குடும்பங்களின் தேவைகள் ஆராயப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படும் என்றார் மங்களூர் ஆயர் Aloysius Paul D' Souza.
இவ்விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்புத் திருப்பலி ஒன்று விரைவில் பொதுமக்களுடன் நிறைவேற்றப்படும் எனவும் கூறினார் ஆயர்.
அரசியல் கைதிகளுக்காக அரசுத்தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர் Cuba தலத்திருச்சபை அதிகாரிகள்.
மே 25, 2010. Cuba தலத்திருச்சபை அதிகாரிகள் அரசுத்தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து அரசியல் கைதிகளின் நிலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அரசுத்தலைவர் Raul Castro வைச் சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த அந்நாட்டு கர்தினால் Jaime Ortega Alamino மற்றும் பேராயர் Dionisio Garcia Ibanez, அரசியல் கைதிகள் நடத்தப்படும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும் என தங்களுக்கு உறுதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
நோயுற்றுள்ள அரசியல் கைதிகள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுவதற்கும் ஏனைய அரசியல் கைதிகள் அவர்களின் வீட்டுக்கருகிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
ஹவானா துணை ஆயர் Juan de Dios Hernandez Ruizன் கூற்றுப்படி, சிறை வைக்கப்பட்டுள்ள சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
கியூபாவில் 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அரசு எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கையின் வடபகுதி குழந்தைகளுக்கு கொழும்புச் சிறார்களின் உதவி.
மே 25, 2010. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு நாட்டிற்குள்ளேயே அகதிகளாக வாழும் வடபகுதிக் குழந்தைகளுக்கு உதவுவதற்கென 30 இலட்சம் இலங்கை ரூபாய்களைத் திரட்டியுள்ளனர் கொழும்பு இளம் கத்தோலிக்கர்கள்.
2008ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்நிதித்திரட்டல் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு துண்டுகள், குடைகள், பள்ளிப் பைகள், மதிய உணவை எடுத்துச் செல்லும் பெட்டிகள், புத்தகங்கள் மற்றும் சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வடபகுதிச் சிறார்களூக்கு வழங்கியுள்ளனர் கொழும்பு இளம் கத்தோலிக்கர்கள்.
இலங்கையின் தென் பகுதி மாணவர்கள் வடபகுதி மாணவர்களில் அக்கறையுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாகவும், அனைத்துத் தரப்பினரும் சகோதரர்கள் என்பதை வலியுறுத்துவதாகவும் இளைஞர்களிடையேயான இந்நிகழ்வு இருந்தது என்றார் இதில் கலந்து கொண்ட குரு Malcolm Perera.
வடபகுதியில் போர் முடிந்து விட்டதாக அரசு அறிவித்துள்ள போதிலும் இன்னும் 60,000 சிறார்கள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் உள்ளனர் மற்றும் 106 பள்ளிகள் மூடியே உள்ளன.
ஆஸ்திரேலிய காரித்தாஸின் உதவித் திட்டங்கள்.
மே 25, 2010. ஏழைகளுக்கான அவசரகால உதவிகளையும், நீண்ட கால உதவித்திட்டங்களையும் தாங்கள் வழங்கி வருகின்ற போதிலும் பொதுமக்களையும் இதில் ஈடுபடுத்தவேண்டிய தேவை அதிகம் அதிகமாக உள்ளது என்கிறது ஆஸ்திரேலிய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம்.
ஆஸ்திரேலியாவில் தங்கள் பணி பற்றிக் குறிப்பிட்ட காரித்தாஸின் அறிக்கை, அவசர கால உதவிகளை வழங்குதல், நீண்ட கால வளர்ச்சியை மனதில் கொண்டு ஏழைகளுடன் உழைத்தல், ஏழ்மைக்கு எதிரானப் போராட்டத்தில் ஆஸ்திரேலியர்களையும் ஈடுபடுத்துதல் போன்றவைகளை தங்கள் பணிகளாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏழ்மையை அகற்றி வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபடுவதே காரித்தாஸ் ஆஸ்திரேலியாவின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment