வத்திக்கான் வானொலி – செய்திகள் 02.06.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வன்முறை பிணக்குகளுக்குத் தீர்வாக அமையாது - திருத்தந்தை
ஜூன்02, 2010 வன்முறை, பிணக்குகளுக்குத் தீர்வாக அமையாது, மாறாக, அது தீய விளைவுகளையும் வன்முறையையும் மேலும் அதிகரிக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் மறைபோதகத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானப் பயணிகள் முன்பாக இவ்வாறு உரைத்த திருத்தந்தை, புனித பூமியின் Gazaவுக்கு அருகில் இத்திங்கள் காலை இடம் பெற்ற கொடும் வன்முறைச் சம்பவம் தனக்கு மிகவும் வேதனை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சர்வதேச மனிதாபிமான உதவிகளை ஏற்றிக் கொண்டு Gaza பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த கப்பல் இத்திங்கள் காலை இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டதில் 19 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கெதிரானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதியை விரும்பும் அனைவருக்கும் இத்தாக்குதல் கவலை அளித்திருப்பதாகவும் இதில் பலியானவர்களுக்குத் தனது இதயப்பூர்வமான அனுதாபத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கவும், நல்லிணக்கம் மற்றும் நிம்மதியுடன் வாழவும் வழிவகுக்கும் நீதியுடன்கூடிய தீர்வுகளை உரையாடல் மூலம் கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரிகளும் உள்ளூர் மற்றும் சர்வதேச அதிகாரிகளும் சோர்வின்றி உழைக்குமாறு திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
மேலும், இச்செவ்வாயன்று எகிப்து நாடு, காசா மக்களுக்குத் தன் எல்லைகளைத் திறந்து விட்டுள்ளதையடுத்து மக்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். தற்சமயம் காசாவில் 15 இலட்சம் பேர் வாழ்கின்றனர்.
சிலுவைகள் குறித்த வழக்கில் இத்தாலிக்கு ஆதரவாக மேலும் பத்து ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளன
ஜூன்02, 2010 சிலுவைகளை வகுப்பறைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் விதித்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இத்தாலிய அரசுக்கு ஆதரவாக மேலும் பத்து ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள சிலுவைகளை அகற்ற ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் விதித்த ஆணைக்கு எதிராக சிலுவைகள் தங்கள் நாட்டில் மதத்தைத் தாண்டிய ஒரு கலாச்சார அடையாளம் என்று இத்தாலிய அரசு மேல் முறையீடு செய்ததால், அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த வழக்கில் ஆர்மீனியா, பல்கேரியா, சைப்ரஸ், கிரீஸ், லித்துவேனியா, மால்டா, மொனாக்கோ, சான் மரினோ, ரொமேனியா, ரஷ்ய கூட்டமைப்பு ஆகிய பத்து நாடுகள் இத்தாலிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு சொல்லப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் நாட்டை எந்த வகையிலும் பாதிக்காத ஒரு வழக்கில், இத்தாலிய அரசுக்கு மற்ற நாடுகள் ஆதரவைத் தெரிவித்திருப்பது இது வரை நிகழ்ந்திராத ஒன்று என்பதால், இந்த வழக்கு அதிகத் தனித்தன்மை வாய்ந்தது என்று செய்திக்குறிப்புகள் கூறுகின்றன.
ஐரோப்பிய கல்வியை மதசார்பற்றதாய் மாற்றுவதில் நீதி மன்றங்கள் தலையிடுவதையும், ஐரோப்பிய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த பல்வேறு நாடுகளின் நிலைப்பாட்டையும் தெளிவாக்க இந்த வழக்கு வழி வகுக்கும் என்று செய்திக்குறிப்புகள் மேலும் கூறுகின்றன.
ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Christian Aid 35 லட்சம் ரூபாய் உதவித் தொகை
ஜூன்02, 2010 மே மாதம் 20ஆம் தேதி ஆந்திர மாநிலத்தைத் தாக்கிய லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Christian Aid எனும் உதவி அமைப்பு 35 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளது.
இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் உணவு, குடிநீர் போன்று பல வகைகளிலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்று இவ்வமைப்பில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.
நெருக்கடி நேரங்களில் துயர் துடைக்கும் பணியில் அனுபவம் பெற்ற இந்த அமைப்பினர் இதுவரை 2,000 க்கும் அதிகமான மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பதும், இனி வரும் வாரங்களில் 10,000 க்கும் அதிகமான குடும்பங்களுக்கு உதவ முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
2004ஆம் ஆண்டு இந்திய கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய சுனாமிக்குப் பின் ஆந்திராவில் Christian Aid உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் லைலா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்தனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தன்னைக் கொல்ல முயன்ற மனிதரைத் தான் மன்னிப்பதாகக் கூறினார் வாழும் கலை இயக்கத்தின் தலைவர்
ஜூன்02, 2010 தன்னைச் சுட்டுக் கொல்ல முயற்சி செய்த மனிதரைத் தான் மன்னிப்பதாகக் கூறினார் வாழும் கலை இயக்கத்தின் (Art of Living Foundation) தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
ரவிசங்கர் தாக்கப்பட்டதை வன்மையாய் கண்டித்த பெங்களூர் பேராயர் பெர்னார்ட் மொராஸ், சமாதானத்தையும், வன்முறையற்ற சமுதாயத்தையும் உருவாக்கப் பாடுபடும் நல்லோர் எக்காரணம் கொண்டும் தாக்கப்படக்கூடாதெனக் கூறினார்.
இயேசு சபையினர் நடத்தும் புனித ஜோசப் கல்லூரியின் முன்னாள் மாணவரான ரவிசங்கர் தன்னைத் தாக்கியவரை மன்னித்துள்ளார் என்பதைப் பெரிதும் பாராட்டிய கர்நாடக கத்தோலிக்கத் திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை Faustine Lobo, மத வழிபாட்டுத் தலங்கள், மதத் தலைவர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்கு அரசு இன்னும் அதிகம் முயற்சிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிறன்று நடந்த இந்தத் தாக்குதலில் ரவிசங்கருக்கு வைத்த குறி தவறி அருகிலிருந்த ஒருவரைக் காயப்படுத்தியது என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தியத் திரைப்படம் ஒன்று அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றுள்ளது
ஜூன்02, 2010 கேரளாவின் கார்மேல் அன்னை சபையினர் உருவாக்கிய திரைப்படம் ஒன்று போலந்து நாட்டில் கடந்த ஞாயிறன்று நிறைவு பெற்ற 25வது அகில உலக கத்தோலிக்கத் திரைப்பட விழாவில் முதல் பரிசை வென்றுள்ளது.
‘நுருங்குவெட்டங்கல்’ (Nurunguvettangal) என்ற 56 நிமிட மலையாளத் திரைப்படம் ஒரு கிராமத்தில் வாழும் ஏழு கன்னியர்களை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ளது. கன்னியர்கள் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பல சவால்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறதென செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அண்மையில் வெளியான "Amen" என்ற புத்தகம் உட்பட கன்னியர்கள் வாழ்வைக் குறித்துத் தொடர்ந்து ஊடகங்களில் வெளிவரும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் வெளியாகியிருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியா, சீனா, தாய்வான் உட்பட 20 நாடுகள் பங்கேற்ற இந்தத் திரைப்பட விழாவில் 172 திரைப்படங்கள் திரையிடப்பட்டன என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சுற்றுச் சூழல் மாற்றங்கள் அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய ஒரு சவால் - கம்போடிய காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி
ஜூன்02, 2010 சுற்றுச் சூழல் மாற்றங்கள் அனைவரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய ஒரு சவால் என்று காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இச்செவ்வாயன்று கம்போடியாவின் Phnom Penhல் கம்போடிய அரசு, அரசு சாரா அமைப்புகள், கம்போடிய காரித்தாஸ் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய கருத்தரங்கின் போது காரித்தாஸ் அமைப்பின் அதிகாரி Sok Sakhan இவ்வாறு கூறினார்.
கம்போடிய கத்தோலிக்க ஆயர் பேரவையின் உதவிகளுடன் இயங்கும் காரித்தாஸ் அமைப்பு, மத பின்னணிகளைத் தாண்டி தேவையுள்ள அனைத்து மக்களுக்கும் உதவி செய்து வருவதாக காரித்தாஸ் அதிகாரி மேலும் கூறினார்.
கம்போடியா வளர்ந்து வரும் நாடு என்பதால் சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறதென்றும் காரித்தாஸ் போன்ற அமைப்புகளின் உதவியால் இந்தச் சவால்களை அரசு சந்திக்க முடிகிறதென்றும் கம்போடிய சுற்றுச் சூழல் துறையைச் சார்ந்த Ou Sunvann செய்தியாளர்களிடம் கூறினார்.
‘ஆகத்தா’ புயலின் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் அரசுடன் இணைந்து திருச்சபை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
ஜூன்02, 2010 மத்திய அமெரிக்காவை கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் தாக்கிய ‘ஆகத்தா’ என்ற புயலின் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணியில் அந்த நாடுகளின் அரசுடன் இணைந்து திருச்சபை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
150 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ள இந்தப் புயலினால் கவுத்தமாலா நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதெனவும் பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டும் இரு பெரும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டுளதெனவும், மே மாதம் 27 ஏற்பட்ட எரிமலை சீற்றத்திலிருந்து மக்கள் மீண்டு வரும் இந்த வேளையில் இந்தப் புயல்காற்று மக்களை இன்னும் அதிகம் பாதித்துள்ளதெனவும் Escuintla மறைமாவட்டத்தைச் சார்ந்த அருட் தந்தை Eleuterio Cojon கூறினார்.
தங்கள் உடைமைகள், வீடுகள், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் அனைத்தையும் இழந்துள்ள நிலையில் இம்மக்கள் பெரிதும் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று அருட் தந்தை Cojon மேலும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment