வத்திக்கான் வானொலி – செய்திகள் 09.06.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே
ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.
இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்
ஜூன்09,2010 ஸ்லோவேனியாவில் இறை சாட்சியாக உயிர் துறந்த 19 வயது இளைஞன், இத்தாலியின் 18 வயது பெண் உட்பட ஒன்பது பேர் வரும் மாதங்களில் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று திருப்பீடம் அறிவித்தது.
இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அளித்த ஒப்புதலுடன் வெளியான இந்தச் செய்தியில், நான்கு பொது நிலையினர் உட்பட ஒன்பது பேர் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளராகப் பணி புரிந்த ஸ்பெயினைச் சார்ந்த Manuel Lazano Garrido இச்சனிக் கிழமையன்று ஸ்பெயினில் Linares நகரிலும், அதற்கடுத்த நாள் ஞாயிறன்று ஸ்லோவேனிய இளைஞன் Lojze Grozde, Celje நகரிலும் முத்திபேறு பெற்றவர்களாக உயர்த்தப்படுவர்.
Lebanon நாட்டைச் சேர்ந்த Stephen Nehme, ஸ்பெயின் நாட்டினர்களான கப்பூச்சின் சபை சகோதரர் Leopoldo Sanchez Marquez de Alpandeire, திருச்சிலுவை சகோதரிகள் சபையின் Maria de la Immaculada Conepcion, இத்தாலியர்களான Chiara Badano என்ற இளம்பெண், அமல மரி பணியாளர்களின் சபையைத் தோற்றுவித்த Anna Maria Adorni, ரோமேனியாவின் ஆயரும் மறை சாட்சியுமான Szilard Bogdanffy, மரியாவின் தூய இதய சகோதரிகள் சபையை நிறுவிய பிரேசில் நாட்டு Maria Barbara, ஆகியவர்கள் முத்திபேறு பெற்றவர்களாக வரும் மாதங்களில் உயர்த்தப்படுவர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பு கூறுகிறது.
உலக வர்த்தக நிறுவனத்தில் பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Silvano Tomasi
ஜூன்09,2010 மரபணுக்களை மாற்றி நுண்ணுயிரை உருவாக்க வழங்கப்படும் உரிமை நன்னெறி பிரச்சனைகளை உருவாக்குவதுடன், இந்த உரிமை சரிவர பயன்படுத்தப்படவில்லை எனில், ஏழை நாடுகள் இதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் என்று பேராயர் Silvano Tomasi கூறினார்.
இச்செவ்வாயன்று ஜெனீவாவில் உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுச் சொத்துரிமை குழுவில் (TRIPS) பேசிய ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் Tomasi இவ்வாறு கூறினார்.
நுண்ணுயிர்கள் குறித்து வழங்கப்படும் இந்த உரிமை நன்னெறிக்கு முரணாகச் செல்வதுடன், வளர்ந்து வரும் பல ஏழை நாடுகளின் முன்னேற்றத்தையும் அதிகம் பாதிக்கும் என்று கூறிய பேராயர் Tomasi, உயிர்கள் குறித்த வளங்களில் தனியாருக்கு ஏக உரிமைகள் அளிப்பதால், அடிப்படை உணவு, மருந்துகள் போன்ற தேவைகளில் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்றும் வலியுறுத்தினார்.
தனியாருக்கு வழங்கப்படும் இந்த உரிமைகள், உணவு குறித்த பாதுகாப்புக்குப் பெரிதும் ஆபத்தானது என்றும் உலகம் சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள் அனைத்து மக்களின், அதிலும் சிறப்பாக நலிந்த மக்கள், ஏழைகள் இவர்களின் நன்மைகளை மனதில் கொண்டு எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் Silvano Tomasi கூறினார்.
நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்
மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.
வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.
போபால் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை ஒத்துழைக்கும் - மத்திய பிரதேசத் தலத் திருச்சபை
ஜூன்09,2010 போபால் நச்சு வாயு விபத்து சம்பந்தமான வழக்கில் போபால் நீதிமன்றம் இத்திங்களன்று அளித்துள்ள தீர்ப்பு, நீதியை அவமதிக்கும் ஒரு குற்றம், எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் திருச்சபை அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும் என்று மத்திய பிரதேசத் தலத் திருச்சபை தலைவர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த விபத்தில், எட்டு பேரைக் குற்றவாளிகள் என்று கூறிய போபால் நீதி மன்றம், அவர்களுக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வழங்கியிருப்பதாகச் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்வளவு தாமதமாகவும், இவ்வளவு குறைந்த அளவு தண்டனையோடும் கொடுக்கப்பட்டுள்ள இவ்வகைத் தீர்ப்புகளால் மக்கள் வெறுப்படைந்து, பணத்திற்காக குற்றங்கள் புரிபவர்களின் துணையை நாடி, நீதியைத் தேடிக் கொள்ளும் அபாயங்கள் உள்ளன என்று ஜபல்பூர் ஆயர் Gerald Almeida கூறினார்.
இந்த விபத்தின் முக்கிய பொறுப்பாளரான Union Carbide நிறுவனத்தின் தலைவர் Warren Anderson எவ்வகையிலும் தண்டிக்கப்படாமல், அமெரிக்காவில் வாழ்ந்து வருவது இந்திய அரசையும், நீதித் துறையையும் கேலிக்குரியதாய் ஆக்கியுள்ளதென மத்திய பிரதேசத் திருச்சபையின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருட்தந்தை Anand Muttungal கூறினார்.
நீதிக்குப் புறம்பான இத்தகைய தீர்ப்புகளால் இந்தியர்கள் அனைவரும் அவமானப் படுகிறோம் என்று அனைத்திந்தியத் துறவியர் அவையின் செயலர் அருட் சகோதரர் Mani Mekkunnel கூறினார்.
விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடை - மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera
ஜூன்09,2010 மனிதர்கள் மேற்கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் கடவுளின் கொடையென்றும், வாழ்வின் பல மதிப்பீடுகளைப் பின் பற்ற இவை அதிகம் உதவும் என்றும் மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera கூறினார்.
இவ்வெள்ளியன்று தென் ஆப்ரிக்காவில் துவங்க இருக்கும் உலகக் கால்பந்து போட்டிகளுக்குச் செல்லும் மெக்சிகோ நாட்டு கால் பந்தாட்ட வீரர்களுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் Carrera இவ்வாறு கூறினார்.
விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறும் வீரர்களை எடுத்துக்காட்டாகக் கூறி, அவர்களைப் போல் விசுவாச வாழ்வில் கிறிஸ்துவர்களும் ஆர்வமாய் பங்கேற்க வேண்டுமென கூறிய புனித பவுலின் சொற்களை நினைவு படுத்திய கர்தினால் Carrera, தியாகங்கள் இன்றி எந்த ஒரு நல்ல முடிவும் ஏற்படுவது கடினம் என்று கூறினார்.
இந்த உலகின் பரிசுகள், புகழ் எல்லாம் மறையக் கூடியவை ஆனால், மாறாமல், மறையாமல் இருக்கும் நிறைவாழ்வை நாடுவதே நம் கடமை என்பதையும் பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera எடுத்துரைத்தார்.
சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை - காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர்
ஜூன்09,2010 தங்கள் சபையின் கொள்கைகளையும், முடிவுகளையும் மாற்றுவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று எகிப்திலுள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவர் கூறியுள்ளார்.
முஸ்லீம்கள் பெருவாரியாக உள்ள எகிப்து நாட்டில் கடந்த வாரம் அங்குள்ள நீதி மன்றம் ஒன்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த இருவருக்கு மறுமணம் செய்து கொள்ளும் அதிகாரம் வழங்கியதை அடுத்து, அங்குள்ள காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவரான Shenouda மற்றும் அச்சபையின் 90 அதிகாரிகள் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், நீதி மன்றத்தின் தீர்ப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இஸ்லாமிய அடிப்படை வாதம் பரவி வரும் இக்காலத்தில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபை தன் கொள்கைகளை ஆதரித்து, நீதி மன்றத்தை எதிர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் சட்டங்களை மதிப்பது தங்கள் கடமை என்றாலும், விவிலியம் கூறும் சட்டங்களே காப்டிக் சபையின் அடிப்படையாகும் என்று தலைவரான Shenouda கூறினார்.
எகிப்தில் வாழும் 7 கோடியே 80 லட்சம் மக்களில் 10 விழுக்காடு கிறிஸ்துவர்கள். அந்தக் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையினர் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment