வத்திக்கான் வானொலி – செய்திகள் 11.06.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குருக்களின் தவறானப் பாலியல் செயல்களுக்கு மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை
ஜூன் 11,2010 கத்தோலிக்கத் திருச்சபையில் குருக்களின் தவறானப் பாலியல் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கடவுளிடமிருந்து மிக உருக்கமுடன் மன்னிப்பை இறைஞ்சினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
அத்துடன், குருக்களின் இத்தகைய தவறானப் பாலியல் நடவடிக்கைகள் இனிமேல் ஒருபொழுதும் இடம்பெறாதிருப்பதற்குத் திருச்சபை தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என்றும் திருத்தந்தை உறுதி கூறினார்.
உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வதேச குருக்கள் ஆண்டின் நிறைவுக் கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பாக, இவ்வெள்ளி காலை 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
ஏறக்குறைய பதினைந்தாயிரம் குருக்களுடன் கூட்டுத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, இச்சர்வதேச குருக்கள் ஆண்டில், குருக்களின் பாவங்கள், குறிப்பாகச் சிறாரை அவர்கள் தவறாகப் பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் இவ்வாண்டு களங்கப்படுத்தப்பட்டு இருந்தது என்று தெரிவித்தார்.
குருத்துவ அழைத்தல்களுக்காகக் கடவுளிடம் கெஞ்ச வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, இவ்வாறு குருத்துவத் திருப்பணியில் இளையோரைச் சேர்க்கும் பொழுது அவர்கள் தங்கள் அழைத்தலுக்கு உண்மையாய் நடந்து கொள்வதற்குத் தேவையான எல்லாப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் திருச்சபை தொடர்ந்து உடன் செல்லும் என்று உறுதி கூறினார்.
இவ்வகை உருவாக்குதல் மூலமாகக் குருக்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் மற்றும் துன்பமான சூழல்களில் இறைவன் அவர்களைப் பாதுகாத்து கண்காணித்து வருவதை அவர்கள் உணருவார்கள் என்றும் அவர் கூறினார்.
இயேசுவின் திருஇதய பெருவிழாவான இவ்வெள்ளி குருக்களின் தூய்மை வாழ்வுக்காகச் செபிக்கும் நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்விழாத் திருப்பலியின் பதிலுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுள்ள, ஆண்டவர் என் ஆயன், எனக்கேது குறை என்ற 23ம் திருப்பாடலை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, விசுவாசிகளைத் திசை திருப்பும் தற்போதைய உலகுப் போக்குக்கு எதிராக நின்று விசுவாசத்தைப் பாதுகாப்பதற்குத் திருச்சபை ஆயனின் கோலைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
உண்மையில் இந்தக் கோலைப் பயன்படுத்துவது அன்பின் சேவையாக இருக்க வேண்டும் என்றும் ஆண்டவரின் கோலும் கைத்தடியும் எப்பொழுதும் பாதுகாப்பைத் தருகின்றது என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
திருச்சபையின் வரலாற்றில் இத்தனை குருக்கள் இணைந்து திருப்பலி நிகழ்த்தியது இதுவே முதன்முறையாகும். இத்திருப்பலியில் புனித ஜான் மரிய வியான்னி பயன்படுத்திய திருப்பலி பாத்திரத்தைத் திருத்தந்தை பயன்படுத்தினார். குருக்களின் பாதுகாவலராகிய இந்தப் புனிதர் இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டே இந்தச் சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கு நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவது அவசியம் – திருப்பீட அதிகாரி
ஜூன் 11,2010 எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்வதற்கான நடவடிக்கைகள், நன்னடத்தை சார்ந்த கல்வியை பரப்புவதன் வழியாக, அந்நோய்க்கான அடிப்படை காரணங்களைக் களைவதாய் இருக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் கேட்டுக் கொண்டார்.
எய்ட்ஸ் நோய் குறித்த ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வில் உரையாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, உண்மையிலேயே, எய்ட்ஸ் நோய் பரவாமல் தடை செய்ய வேண்டுமானால், அந்நோய்க்கான மூலகாரணங்கள் அகற்றப்பட வேண்டும் மற்றும் அந்நோயாளிகள் மீது அன்பு காட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
உலகில் தினமும் 7,400 பேர் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர், தற்சமயம் ஏறத்தாழ 40 இலட்சம் பேர் இந்நோய்க்கான சிகிச்சை பெறுகின்றனர், அதேசமயம் 97 இலட்சம் பேருக்கு சிகிச்சை தேவைப்படுகின்றது, இரண்டு பேருக்கு சிகிச்சை தொடங்கும் பொழுது ஐந்து பேர் புதிதாகத் தாக்கப்படுகின்றனர் என்றும் பேராயர் மிலியோரே சுட்டிக் காட்டினார்.
அறநெறிக் கூறுகளை உள்ளடக்காத பொருளாதார நுட்பங்கள், ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது - வத்திக்கான் உயர் அதிகாரி
ஜூன்11,2010 அறநெறிக் கூறுகளை உள்ளடக்காதப் பொருளாதார நுட்பங்கள், தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமானத் தீர்வுகளுக்கு இட்டுச் செல்லாது என்று, பன்னாட்டு தொழில் கருத்தரங்கில் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
பன்னாட்டுத் தொழில் கருத்தரங்கின் 99வது அமர்வில் இவ்வியாழனன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, தனியாட்களையும் குடும்பங்களையும் மிகவும் பாதித்துள்ள தற்போதைய உலகளாவிய நிதி மற்றும் பொருளாதார நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகள் குறித்து விளக்கினார்.
இந்த நெருக்கடிகளால், 2015ம் ஆண்டில், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் இரண்டு கோடிக்கு மேற்பட்டவர்களும் உலக அளவில் 5 கோடியே 30 இலட்சம் பேரும் கடுமையான வறுமையில் வாழவேண்டியிருக்கும் என்றும் கூறிய பேராயர் தொமாசி, இவை, அமைப்புமுறை சீர்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன என்றார்.
92 நாடுகளில், 75 விழுக்காட்டிற்கு மேற்பட்ட உள்நாட்டு உற்பத்தியும், 200 கோடி முதல் 250 கோடிப்பேரின் வருவாயும் வேளாண்மையைச் சார்ந்து இருக்கின்றது என்றும் பேராயர் விவரித்தார்.
வேலைவாய்ப்பற்ற இளையோரின் எண்ணிக்கை 2008க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் 85 இலட்சமாக அதிகரித்திருந்தது, இந்த அதிகரிப்பு, கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகம் என்பதையும் பேராயர் தொமாசி கோடிட்டுக் காட்டினார்.
தென்னாப்ரிக்க கத்தோலிக்கத் திருச்சபை உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது
ஜூன் 11,2010 உலகிலுள்ள எல்லா தென்னாப்ரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஜொகானஸ்பர்க்கில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு இணையான அமைதி கால்பந்து போட்டியை நடத்தி வருகிறது தலத்திருச்சபை.
இவ்வெள்ளியன்று தென்னாப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் 19-வது உலககோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ளவேளை, அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை அதற்கு இணையான சர்வதேச கால்பந்து போட்டியை நடத்தி வருவது குறித்துப் பேசிய திருச்சபை அதிகாரி ஒருவர், இதற்கான காரணத்தையும் விளக்கினார்.
உலகிலுள்ள எல்லாத் தென்னாப்ரிக்கர்களையும், சிறப்பாக, இந்த உலக நிகழ்வில் ஓரங்கட்டப்பட்டுள்ளோரை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இதனை நடத்துவதாகத் தெரிவித்தார், தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்கள் பேரவையின் தொடர்புத்துறை அலுவலகத்தின் Antoine Soubrier.
கத்தோலிக்கத் திருச்சபை நடத்தும் இந்த அமைதிக் கால்பந்து போட்டி, பன்னாட்டுக் கூறைக் கொண்டுள்ளது என்றும், இம்மாதம் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் சுமார் 15 நாடுகளின் 64 விளையாட்டு வீரர்கள் ஜொகானஸ்பர்க் நகரின் ஏழைகள் வாழும் பகுதியில் விளையாடுவார்கள் என்றும் Soubrier தெரிவித்தார்.
இது, தென்னாப்ரிக்கர்கள் ஒருவரையொருவர் அறிய வாய்ப்பாக அமைகின்றது என்றும் அவர் கூறினார்.
ஜூன் 11, இவ்வெள்ளி மாலை தொடங்கியுள்ள, உலககோப்பை கால்பந்து போட்டி, ஜுலை 11ம்தேதி வரை நடக்கும். இத்துவக்க விழாவில் சுமார் 1,500 கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
பிலிப்பைன்ஸின் புதிய அரசுத்தலைவரின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயர்கள் ஆதரவு
ஜூன்11,2010 பிலிப்பைன்சில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுத்தலைவர் Benigno Aquino III வின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள அதேவேளை, அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டுமென்று அந்நாட்டு ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிலிப்பைன்சில் தேசிய அளவில் தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்நாட்டு காங்கிரஸ் அவை, நாட்டின் 15வது அரசுத்தலைவர் Benigno Aquino என்றும் உதவி அரசுத்தலைவர் Jejomar Binay என்றும் இவ்வாரத்தில் அறிவித்தது.
புதிய அரசுத்தலைவரின் கொள்கைகள் செயல்வடிவம் எடுக்க ஆயர்கள் உதவுவதாக உறுதி கூறிய, பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Nereo Odchimar, இவர் நேர்மையான அதிகாரிகளை நியமிப்பார் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஊழலைக் குறைத்தல், வரிகள் மீது கடுமையான கொள்கைகளைக் கொண்டு வருதல் உட்பட பல கோட்பாடுகளைத் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்திருந்தார் அக்குய்னோ.
மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளன
ஜூன்11,2010 சிறார்ப் படைப்பிரிவில் சேர்க்கப்படுவதை நிறுத்துவதற்கு மத்திய ஆப்ரிக்காவில் ஆறு நாடுகள் தீர்மானித்திருப்பதை வரவேற்றுள்ளது யூனிசெப் என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் சிறார் அமைப்பு.
காமரூன், சாட், மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, நைஜர், நைஜீரியா, சூடான் ஆகிய ஆறு நாடுகளும், சிறார் பற்றிய சர்வதேச உரிமைகள் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் தீர்மான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நடவடிக்கை, ஆப்ரிக்காவின் புதிய தொடக்கமாக இருக்கின்றது என்று பாராட்டினார் சாட் நாட்டிலுள்ள யூனிசெப் பிரதிநிதி Marzio Babille.
சிறார் விபசாரம், சிறார் படைவீரர், சிறார் வியாபாரம் பற்றிய சர்வதேச ஒப்பந்தங்களை 2012ம் ஆண்டுக்குள் எல்லா நாடுகளும் முழுமையாய் அமல்படுத்துமாறு கடந்த மாதத்தில் ஐ.நா.பொதுச் செயலர் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திக்கான் வானொலி – செய்திகள் 12.06.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியினால் பலன் என்ன? - திருத்தந்தை
ஜூன்12,2010 நீதி, சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படையில் சமத்துவத்தை வளர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், இன்றைய மற்றும் வருங்கால ஐரோப்பாவுக்கு நன்மைபயக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியின் 160 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, சமூகநலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் இந்த வங்கியின் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் ஆதரவு அளிக்கின்றது என்றுரைத்தார்.
மனித மாண்பையும் மனிதனின் நலத்தையும் மதிக்காதப் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தும் சர்வாதிகாரக் கருத்துக் கோட்பாடுகளால் ஏற்படும் பலன் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார் திருத்தந்தை.
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இக்காலத்தில், அப்பிரச்னையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள், வெறும் நிதியை மட்டும் சார்ந்ததாக இருக்கக் கூடாது எனவும் திருத்தந்தைக் கேட்டுக் கொண்டார்.
1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய அவையின் வளர்ச்சி வங்கியில் 1973ம் ஆண்டு அங்கத்தினராகச் சேர்ந்தது திருப்பீடம்.
மிகஅழகான காங்கோ - கத்தோலிக்கத் திருச்சபையின் முயற்சிகள்
ஜூன்12,2010 காங்கோ ஜனநாயகக் குடியரசு விடுதலை அடைந்ததன் 50ம் ஆண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு கட்டமாக அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை, என்றுமில்லாத மிக அழகான காங்கோவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
காங்கோவின் சமூகக் கட்டமைப்பைச் சீர்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் கத்தோலிக்கத் திருச்சபை, கின்ஷாசா கத்தோலிக்கப் பல்கலைகழகத்தில் மூன்று நாள் கருத்தரங்கையும் நடத்தியுள்ளது.
பொன்விழா என்றால், நாம் எங்கிருந்து வந்தோம், நாம் எப்படி இருக்கிறோம், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்திப்பதே என்றுரைத்த ஆயர்கள், நாட்டின் நலனுக்குக் கேடு ஏற்படும் விதத்தில் இடம்பெற்ற தவறுகளுக்காகக் கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் நாட்டினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதி அமைதி, பணி என்ற விருதுவாக்கைக் கொண்டுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி விடுதலை அடைந்தது. இந்நாடு 1997ம் ஆண்டுவரை சயீர் என்று அழைக்கப்பட்டது.
திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் - கேரள ஆயர்கள்
ஜூன்12,2010 திருச்சபை விழாக்கள் மிகவும் எளிமையாகவும் ஆன்மீக உணர்வுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று கேரள கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருச்சபை விழாக்கள் தற்சமயம் ஆன்மீகம் குறைந்து வியாபாரமாக, மிகுந்த ஆடம்பரமாக நடைபெற்று வருகின்றன, இதனைச் சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கேரள ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஆன்ட்ரூஸ் தழத் கூறினார்.
விழாக்களில் இடம்பெறும் வானவேடிக்கைகள், போக்குவரத்து நெருக்கடிகள், நீண்ட பவனிகள், அலங்கார வளைவுகள் போன்றவைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வு தேவை எனவும் கேரளாவின் சுமார் 50 இலட்சம் கத்தோலிக்கரிடம் கூறியுள்ளனர் ஆயர்கள்.
திருச்சபையில் கொண்டாடப்படும் விழாக்கள் கிறிஸ்தவச் சமூகத்தின் ஆன்மீகத்தைத் தட்டி எழுப்பி அதனைப் புதுப்பிப்பதாக இருக்க வேண்டும் என்று கேரள ஆயர்கள் இவ்வாரத்தில் நிறைவு செய்த கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கேரள மாநிலத்தில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இதனைக் குறைப்பதற்குப் பங்குத்தளங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
கேரளாவின் 3 கோடியே 50 இலட்சம் பேரில் 19 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் - திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர்
ஜூன் 12, 2010 ஒரிசா மாநிலத்தில் பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் சுரண்டப்படுவதால் இந்தியாவிலேயே அம்மாநிலத்தில்தான் குற்றங்களின் எண்ணிக்கை அதிகம் என்று திருச்சபை மனித உரிமை நடவடிக்கையாளர் ஒருவர் கூறினார்.
பூர்வீக இனத்தவரும் தலித் இனத்தவரும் அதிகமாக வாழும் பகுதிகளை பல்வேறு தொழிற்சாலைகளும் வியாபாரிகளும் ஆக்ரமிப்பதால் குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன என்று அருட்தந்தை நிக்கோலாஸ் பார்வா அறிவித்தார்.
இந்த மக்கள் எப்பொழுதெல்லாம் கொதித்து எழுகிறார்களோ அப்பொழுதெல்லாம், கந்தமால் மாவட்டத்தில் இடம் பெற்றது போன்று, அவர்கள் வன்முறையால் நசுக்கப்படுகின்றனர் என்று அக்குரு மேலும் கூறினார்.
ஒரிசாவின் 3 கோடியே 68 இலட்சம் மக்களில் சுமார் 40 விழுக்காட்டினர் பூர்வீக மற்றும் தலித் இனத்தவர். இந்த மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் குற்றங்களில் ஏறக்குறைய 90 விழுக்காடு போதிய ஆதாரங்கள் இன்றி நிரூபிக்கப்படாமல் இருக்கின்றது என்று அண்மையில் மத்திய சமூகநீதி அமைச்சர் தனது அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை கவலை
ஜூன்12,2010 தென்னாப்ரிக்காவின் ஜோஹானஸ்பர்கில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் விசிறிகள் குறித்து ஹாங்காங் திருச்சபை பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சூதாட்டம் தன்னிலே நல்லது அல்ல என்று எச்சரித்துள்ள இயேசு சபை அருள்தந்தை Robert Ng Chi-fun, கால்பந்து போட்டியை வைத்து விளையாடும் சூதாட்டம் ஏமாற்றத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும் எனக் கூறியுள்ளார். இவர், ஹாங்காங் தூயஆவி குருத்துவக் கல்லூரியில் நன்னெறி இறையியல் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
மேலும், கால்பந்து போட்டியை வைத்து சூதாடும் மக்களில் பெரும்பாலானோர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று, இந்தச் சூதாட்டம் குறித்து 2003ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை ஆய்வு நடத்திய ஹாங்காங் காரித்தாஸ் நிறுவனம் அறிவித்தது.
பாலர் தொழில்முறையை அகற்றுவதற்கு ஐ.நா.நிறுவனங்கள் அழைப்பு
ஜூன்12,2010 உலகில் 5க்கும் 14 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 15 கோடிச் சிறார் தொழிலாளர்கள் இன்னும் வேலை செய்கின்ற வேளை, சிறார் தொழிலாளர்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கு அரசுகளும் தனியார் அமைப்புகளும் உதவுமாறு கேட்டுள்ளது யூனிசெப் நிறுவனம்.
இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும், சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாளை முன்னிட்டு இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளது ஐ.நா.வின் குழந்தை நல நிதி நிறுவனமான யூனிசெப்.
கல்வி, வறுமை ஒழிப்பு, பாலியல் சமத்துவம், எய்ட்ஸ் நோய் ஒழிப்பு உட்பட மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டும் அதேவேளை, சிறார் தொழில்முறை இன்னும் நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார் யூனிசெப்பின் சிறார் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் சூசன் பிஸ்ஸெல்.
அரசியல் ரீதியாக மட்டும் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது என்றுரைத்த பிஸ்ஸெல், அனைத்து மட்டங்களிலும் இதற்கு ஒத்துழைப்பு தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
சிறார் தொழிலாளர் ஒழிப்புமுறை தினம் 2002ம் ஆண்டில் முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் இதில் முன்னேற்றம் காணப்பட்டாலும், இன்னும் உலகில் 5க்கும் 17 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 21 கோடியே 50 இலட்சம் சிறார் தொழிலாளர்கள் உள்ளனர் என்று உலக தொழில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிறார் தொழிலாளருக்கு எதிரான சர்வதேச நாள், 2002ம் ஆண்டிலிருந்து ஜூன் 12ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வேலைவாய்ப்பு UNIDO உதவி
ஜூன்12,2010 இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் நாற்பதாயிரம் விதவைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் அரசின் திட்டத்திற்கு UNIDO என்ற ஐ.நா.வின் தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவி வருகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குத் தொழிற்நுட்பம் மற்றும்பிற மதிப்பீட்டுத் திட்டங்களுக்கு UNIDO நிறுவனம் உதவி வருவதாக அதன் இயக்குனர் Kandeh Yumkella அறிவித்தார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது இடம்
ஜூன்12,2010 அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் மூன்றாவது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர் என்று அந்நாட்டுக் கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.
அமெரிக்காவில் குடியேறும் வெளிநாட்டினர்களில் மெக்சிகர்கள் தொடர்ந்து முதலிடத்திலும், அடுத்த இடத்தை பிலிப்பைன்ஸ் நாட்டினரும் மூன்றாவது இடத்தை இந்தியர்களும் பிடித்துள்ளனர் என்று அக்கணக்கெடுப்பு அறிவிக்கிறது.
2008ல் எடுக்கப்பட் மக்கள் தொகைக் கணக்குப்படி அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 23 இலட்சமாகும். இவர்களில் 4 இலட்சத்து 55 ஆயிரம் பேர் அங்கேயே பிறந்து வளர்ந்த வம்சாவளியினர். 66.4 சதவீதம் பேர் இந்தியாவில் பிறந்தவர்கள்.
கடந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பில் வெளிநாட்டினர் வரிசையில், சீனர்கள் இந்தியர்களைவிட முன்னணியில் இருந்தனர், ஆனால் தற்சமயம், சீனர்களைவிட இந்தியர்கள் முன்னணியில் இருக்கின்றனர் என்று அக்கணக்கெடுப்பு மேலும் கூறுகிறது.
நியூயார்க், கலிபோர்னியா, நியூஜெர்சி, டெக்சாஸ் பகுதிகளில், மொத்தம் உள்ள இந்தியர்களில் 50 சதவீதம் பேர் வசித்து வருகின்றனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் நல்ல கல்வி அறிவு உடையவர்களாகவும் உள்ளனர் என அது கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment