வத்திக்கான் வானொலி – செய்திகள் 04.06.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சைப்ரஸ் நாட்டில் திருத்தந்தை திருப்பயணத்தை ஆரம்பித்தார்
ஜூன்04,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் 16வது வெளிநாட்டுத் திருப்பயணத்தை இவ்வெள்ளி காலை உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் நண்பகல் 1 மணிக்கு ரோம் நகரிலிருந்துத் துவக்கினார். சைப்ரஸ் நாட்டில் 3 நாள் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் நம் பாப்பிறை. கடந்த ஆண்டு மே மாதம் புனித பூமிக்குப் பயணம் மேற்கொண்டத் திருத்தந்தை, மத்தியக்கிழக்கு நாடுகளின் திருச்சபைத் தலைவர்களோடு செப்டம்பரில் ரோம் நகரில் நடத்தியக் கூட்டத்தின் இறுதியில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 10 முதல் 24 வரை மத்தியக்கிழக்குப் பகுதிக்கான உலக ஆயர் மாநாடு ரோம் நகரில் கூட்டப்படும் என அறிவித்திருந்தார். அந்த மாநாட்டிற்கான திட்ட முன்வரைவை மத்தியக்கிழக்கு ஆயர்களிடம் ஒப்படைப்பது இத்திருப்பயணத்தின்போது இடம்பெற உள்ளது. மேலும் இத்திருப்பயணத்தின்போது கிறிஸ்தவ ஐக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு மேய்ப்புப் பணி சார்ந்த திருப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
வெள்ளி உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு திருத்தந்தையைத் தாங்கிச்சென்ற ஆலித்தாலியா விமானம் சைப்ரஸின் நாட்டைச் சென்றடைந்தபோது உள்ளூர் நேரம் மதியம் 2 மணி. ரோம் நகருக்கு அப்போது நண்பகல் 1 மணி. இந்தியாவுக்கோ மாலை 4மணி 30 நிமிடங்கள். சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகரைச் சென்றடைந்த திருத்தந்தையை முதலில் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் அந்தோனியோ ஃப்ராங்கோ விமானத்திற்குள் சென்று வாழ்த்தி வரவேற்றார்.
திருத்தந்தை விமானத்திலிருந்து கீழே இறங்கி வர, அரசுத்தலைவர் தெமெத்ரிஸ் கிறிஸ்தோஃபியாஸ் அவரைக் கை குலுக்கி வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சிக்கென ஏற்பாடு செய்திருந்த மேடை நோக்கி இரு தலைவர்களும் இணைந்து நடந்துச் சென்றனர். திருத்தந்தையை வரவேற்கக் காத்திருந்த சைப்ரஸின் Maronite பேராயர் Joseph Soueif, லத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal, சைப்ரஸின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் Chrysostomos, தலத்திருச்சபை மற்றும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தார் திருத்தந்தை.
ராணுவ அணிவகுப்பு மரியாதை திருத்தந்தைக்கு வழங்கப்பட, சைப்ரஸ் மற்றும் வத்திக்கான் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. முதலில் அரசுத்தலவர் திருத்தந்தையை வரவேற்றுப்பேசினார். திருத்தந்தையும் சைப்ரஸ் நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் ஒலிவ மரம் ஒன்றையும் திருத்தந்தை ஆசீர்வதித்தார். பின்னர் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
துருக்கியில் ஆயர் Luigi Padovese அவரது வாகன ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டார்
ஜூன்04,2010 துருக்கியில் அனதோலியா பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த ஆயர் Luigi Padovese இவ்வியாழன் மதியம் அவரது வாகன ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 63.
1947ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் பிறந்த Luigi, கப்புச்சின் சபையில் துறவற வாழ்வை மேற்கொண்டார். இவர் 1973ஆம் ஆண்டு குருவாகவும், பின்னர் 2004ஆம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.
ஆயர் Luigi Padovese கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு Lombardi செய்தியாளர்களிடம் கூறினார். ஆயரது அற்பண வாழ்வு, துருக்கியில் வாழும் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வழிகாட்டும் வகையில் அமைந்திருந்ததென அருட்தந்தை Lombardi மேலும் கூறினார்.
துருக்கியிலுள்ள திருச்சபை நேரியதொரு தலைவரை இழந்துள்ளதென துருக்கிக்கான திருப்பீட தூதுவர் பேராயர் Antonio Lucibello கூறினார். இத்தாலியில் பிறந்த Luigiயின் மறைவுக்கு இத்தாலிய ஆயர்கள் பேரவையின் சார்பாக தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
ஆயர் Padoveseஐக் கொலை செய்த அவரது ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மன நிலை சரியில்லாதவர் எனவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆகத்தா புயலால் கவுத்தமாலாவில் பாதிக்கப்பட்டோருக்குத் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை
ஜூன்04,2010 ஆகத்தா புயலால் கவுத்தமாலாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கும், துயரங்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையின் அனுதாபங்களைத் தாங்கிய இந்தத் தந்தியை கவுத்தமாலாவில் உள்ள திருப்பீடத் தூதுவர், பேராயர் பால் கல்லகெருக்கு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே இப்புதனன்று அனுப்பினார்.
கவுத்தமாலாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அகில உலக கிறிஸ்துவ சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதாகவும் திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.
இந்தப் புயலால் அனைத்தையும் இழந்துள்ள மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தைக்கும், உதவிகள் செய்து வரும் கவுத்தமாலா காரித்தாஸ் அமைப்புக்கும், Escuintla மறைமாவட்ட ஆயர் Victor Hugo Palma தன் நன்றிகளைக் கூறியுள்ளார். சோதனைகள் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் இறைவாக்கு இந்த மக்களுக்கு ஒளியாக இருக்க வேண்டும் என்றும் ஆயர் Palma தன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குருக்கள் ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கு
ஜூன்04,2010 குருக்கள் ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஜூன் மாத இறுதியில் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்து வருகிறது.
தலித், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் பணி புரியும் குருக்களுக்காக நடத்தப்படும் இந்த கருத்தரங்கு சென்னையில் ஜூன் மாதம் 28, 29 தேதிகளில் நடைபெறும் என்று இந்திய ஆயர் பேரவையின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
தலித் மக்களை வலிமை வாய்ந்தவர்களாய் மாற்றுவதும், யாரையும் புறந்தள்ளாமல் அனைவரையும் ஒன்றிணைத்து சமுதாயங்களைக் கட்டி எழுப்புவதும் இந்தக் கருத்தரங்கின் மையப்பொருளாக இருக்கும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
சிறுபான்மையினருக்கான முன்னேற்றங்கள் ஏழைகளைச் சென்றடையவில்லை - இந்திய திருச்சபை அதிகாரிகள்
ஜூன்04,2010 இந்திய அரசு இப்புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மத சிறுபான்மையினர் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும், இந்த முன்னேற்றங்கள் எவ்வளவு தூரம் ஏழைகளைச் சென்றடைந்துள்ளன என்பதைக் குறித்த தங்கள் ஐயங்களையும் எழுப்பியுள்ளனர் இந்திய திருச்சபை அதிகாரிகள்.
சிறுபான்மையினருக்கு இன்னும் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங் தன் அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் எனினும், இந்த வேலை வாய்ப்புகள் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டோரையும் உண்மையிலேயே சென்று அடையவில்லை என்று இந்திய ஆயர் பேரவையின் தாழ்த்தப்பட்டோர் குழுவின் செயலர் அருட் தந்தை காஸ்மோன் ஆரோக்கியராஜ் கூறினார்.
2007 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் மத்தியில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் 6.9 விழுக்காடு என்று இருந்த நிலை 2009 ஆம் ஆண்டு 9.24 விழுக்காடாக உயர்ந்துள்ளதென அரசு அறிக்கை கூறியுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த வேலை வாய்ப்புத் திட்டங்களால் நகரங்களில் உள்ள சிறுபான்மையினரே அதிகம் பயன் பெற்றுள்ளனர் என்றும், இந்தத் திட்டங்களால் கிராமங்களில் உள்ளவர்கள் பயன் பெறவில்லை என்றும் அருட்தந்தை ஆரோக்கியராஜ் கூறினார்.
மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்தவர்களைக் காவல் துறை கைது செய்திருப்பதற்கு குஜராத் தலத் திருச்சபை கண்டனம்
ஜூன்04,2010 குஜராத்தில் மக்கள் சேவையில் ஈடுப்பட்டிருந்த இருவரைக் காவல் துறை கைது செய்திருப்பதற்கு அங்குள்ள தலத் திருச்சபை தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று இரு வேறு அரசு சாரா அமைப்புக்களில் பணி புரிந்து வரும் Srinivas Sattaya Kurapati, அவரது மனைவி Hansa இருவரையும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காவல் துறை கைது செய்தது.
எந்த வித ஆதாரமும் இன்றி இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருப்பது அரசின் அராஜக போக்கை மேலும் உறுதிப்படுத்துகிறதென அகமதாபாத்தில் மனித உரிமைகள் மையத்தை நடத்தி வரும் இயேசு சபைக் குரு Cedric Prakash கூறினார்.
Maoist மற்றும் பிற தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சமுக சேவை செய்யும் 12 பேரை இதுவரை அரசு கைது செய்திருக்கின்றதென அருட்தந்தை Prakash கூறினார்.
பழங்குடியினருக்கு எதிராக அரசு மேற்கொண்ட வன்முறைச் செயல்களைச் சுட்டிக் காட்டி கேள்விகள் கேட்டதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சமூகப் பணி மையத்தின் இயக்குனர் அருட்தந்தை Xavier Manjooran கூறினார்.
ஹாங் காங்கில் ‘ஜூன் 4 நிகழ்வு’ என்று நடைபெற்ற செப வழிபாடுகளில் கத்தோலிக்க விசுவாசிகள் பெருமளவில் பங்கேற்றனர்
ஜூன்04,2010 ஹாங் காங்கின் பல்வேறு ஆலயங்களில் ‘ஜூன் 4 நிகழ்வு’ என்று நடைபெற்ற செப வழிபாடுகளில் கத்தோலிக்க விசுவாசிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
21 ஆண்டுகளுக்கு முன்னால் 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில் சீன அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 241 பேர் கொல்லப்பட்டதையும், 7000க்கும் அதிகமானோர் காயமடைந்ததையும் நினைவு கூர்ந்து, பல இடங்களில் மெழுகு திரி ஏற்றப்பட்ட இரவு கண்விழிப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மே மாதம் 29 ஆம் தேதி குடியரசு தேவதை என்ற சிலை ஒன்று ஹாங் காங்கில் நிறுவப்பட்டதை காவல் துறை தடுத்ததாகவும், அரசின் கட்டுப்பாடுகளைக் கடந்து இந்த நாளை நினைவு கூற “ஹாங் காங் குடியரசு ஒன்றிப்பு” என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 4 ஆம் நாளை குடியரசுக்கான வேண்டுதல் நாளாக அனுசரிக்க இருப்பதாக ஜெபக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் Lina Chan Lai-na கூறினார்.
இயற்கை வளங்களைச் சீரமைப்பது செல்வத்தைப் பெருக்கும் - ஐ.நா.வின் அறிக்கை
ஜூன்04,2010 காடுகள், ஏரிகள், குளங்கள், ஆறுகள் என்று அனைத்து இயற்கை வளங்களையும் சீரமைப்பது செல்வத்தைப் பெருக்குவதோடு, வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும், வறுமையை நீக்கவும் வழி வகுக்கும் என்று ஐ.நா.வின் சுற்றுச் சூழல் திட்டக் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள 30 வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக் காட்டி, அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதை இவ்வியாழனன்று வெளியான இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
'இறந்த பூமிக் கோளம், வாழும் பூமிக் கோளம்' என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், இந்த முயற்சிகள் பெரும் முதலீடுகள் இன்றி எளிய வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இவற்றால் விளைந்துள்ள பலன்கள் பெருமளவானவை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
நமது பூமியின் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணியால் மனித குலத்திற்கு ஆண்டொன்றுக்கு 3000 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்வங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு என்று ஐ.நா.வின் சுற்றுச் சூழல் திட்டக் குழுவின் இயக்குனர் Achim Steiner கூறினார்.
அகில உலக பல்லுயிர் ஆண்டான 2010ல் வெளியாகியுள்ள இந்த அறிக்கை, இயற்கையை, சுற்றுச் சூழலைக் குறித்த தெளிவை அரசுகளுக்கும், மக்களுக்கும் அளிக்கும் என்ற தன் நம்பிக்கையை Steiner தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment