Saturday, June 5, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 29.05.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அருள்தந்தை மத்தேயு ரிச்சி சே.ச. நற்செய்தியை அறிவிப்பதற்காகச் சீனா சென்றார்
மே29,2010 நற்செய்தியை அறிவிப்பதற்காகச் சீனாவுக்கு சென்ற சேசு சபை அருள்தந்தை மத்தேயு ரிச்சி (Matteo Ricci) முதன்முதலில் ஒரு மறைபோதகர் என்றுரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சீனாவில் அவர் நற்செய்தி அறிவிக்கும் போது கலாச்சாரங்களுக்கு இடையேயும் சீனாவுக்கும் மேற்குக்கும் இடையேயும் முக்கியமான உரையாடலை உருவாக்கினார் என்றும் திருத்தந்தை கூறினார்.
அருள்தந்தை மத்தேயு ரிச்சி இறந்ததன் 400ம் ஆண்டை முன்னிட்டு, அவர் பிறந்த இத்தாலியின் Macerata மற்றும் மார்க்கே பகுதியின் சுமார் ஏழாயிரம் பயணிகளை வத்திக்கான் ஆறாம் பவுல் மண்டபத்தில் இச்சனிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
Macerata மறைமாவட்ட ஆயர் Claudio Giuliodori தலைமையில் திருத்தந்தையைச் சந்தித்த Macerata-Tolentino-Recanati-Cingoli-Treia பகுதியின் விசுவாசிகள், குருக்கள், குருமாணவர்கள், மாணவர்கள், அரசு அதிகாரிகள், இராணுவத்தினர், இயேசு சபை அதிபர் அருள்தந்தை Adolfo Nicolás, இயசு சபை பிரதிநிதிகள் என சுமார் ஏழாயிரம் பேரைச் சந்தித்தார் திருத்தந்தை.
"Nimen hao" அதாவது எப்படி இருக்கிறீர்கள்? என்று சீன மொழியில் இப்பயணிகளை முதலில் வாழ்த்தி வரவேற்ற திருத்தந்தை, ரிச்சி, சீனாவில் இன்றும் உயர்ந்த மதிப்புடன் விளங்குகிறார் என்றும் கூறினார்.
இந்த மறைபோதகக் குருவின் பணியானது, நற்செய்தியைச் சீனக்கலாச்சாரத்தோடு ஒன்றிணைத்தது மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தையும் அறிவியலையும் சீனாவில் நுழைத்ததோடு பிரிக்க முடியாதபடி இருந்தது என்றும் தெரிவித்தார் அவர்.
மத்தேயு ரிச்சி மற்றும் அவரது நண்பர்களின் நினைவானது சீனத் திருச்சபைக்காகவும் சீன மக்களுக்காகவும் நாம் தொடர்ந்து செபிக்க அழைப்பு விடுக்கின்றது என்ற திருத்தந்தை, ஒவ்வோர் ஆண்டும் மே24ம் தேதி சகாய அன்னை திருவிழாவன்று சீனாவுக்காகச் செபிக்கின்றோம் என்று கூறினார்.
இந்த மாபெரும் இயேசு சபை மறைபோதகர் மத்தேயு ரிச்சி, 1610ம் ஆண்டு மே11 ம்தேதி பெய்ஜிங்கில் இறந்தார். சீனாவில் வெளிநாட்டவர் அடக்கம் செய்யப்படுவது நினைத்துப் பார்க்க முடியாதது, எனினும் இவர் அங்கு அடக்கம் செய்யப்பட அரசு அனுமதியளித்தது அவருக்குக் கிடைத்த அசாதாரணச் சலுகையாகும், இன்றும் அரசு அதிகாரிகளால் அவரது கல்லறை பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்ப்டடு வருகிறது என்றும் திருத்தந்தை உரைத்தார்.

அன்னை தெரசா நாணயம் வெளியிட இந்திய அரசு முடிவு
மே29,2010 "பிறரன்பு மறைபோதக சபையைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த முத்திப்பேறு பெற்ற அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட இந்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அன்னை தெரசாவுக்கு ஏற்கனவே நோபல் பரிசு, பாரத ரத்னா விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் உருவம் பொறித்த நாணயத்தையும் வெளியிட வேண்டும் என, சென்னையில் இயங்கும் அன்னை தெரசா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்தன.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த மத்திய அரசு, "அன்னை தெரசாவின் பிறப்பு நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 26ம் தேதி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும்' என அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அன்னை தெரசா நூற்றாண்டு விழாவாகவும், நாணய வெளியீட்டு விழாவாகவும் கோல்கட்டாவில் நடத்தப் படுகிறது.

உலகை அணுஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டன் புதிய அரசு நடவடிக்கை எடுப்பதற்கு Pax Christi அழைப்பு.
மே29,2010 உலகை அணுஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு பிரிட்டனுக்கு இருக்கும் தார்மீகக் கடமையை அந்நாட்டின் புதிய அரசு நிறைவேற்றுமாறு Pax Christi என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகில் அணுஆயுதங்கள் ஒழிக்கப்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபைத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் இந்த ஆயுதங்கள் இன்னும் பெருமளவில் இருப்பதாகவும், இவற்றில் சில ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாவும் பாக்ஸ் கிறிஸ்டியின் பொதுச் செயலர் Pat Gaffney கூறினார்.
பிரிட்டன், அணுஆயுதங்களை அதிகமாகக் கொண்டிருப்பதாக உரைத்த Pat Gaffney, சர்வதேச அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தின் ஆறாவது பிரிவின்கீழ் வாழ்வதற்கு பிரிட்டனுக்கு ஒழுக்கரீதியான கடமை உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மத்திய கிழக்குப் பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத இடமாக மாற்றுவதற்கு நாடுகள் இசைவு
மே29,2010 மத்திய கிழக்குப் பகுதியை அணுஆயுதங்கள் இல்லாத இடமாக மாற்றுவதற்கு, அணுப்பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் ஏகமனதாக இசைவு தெரிவித்துள்ளன.
நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் உலக அளவில் அணுஆயுதங்கள் களையப்படுவது குறித்து ஏறக்குறைய ஒருமாதம் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட 28 பக்க அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 189 நாடுகள் தங்களது இசைவைத் தெரிவித்துள்ளன.
அணுப்பரவலைத் தடை செய்வதற்கு அழைப்பு விடுக்கும் கருத்தரங்கு ஒன்றை 2012 ஆம் ஆண்டில் கூட்டவும், அதில் இஸ்ரேல், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கப்பட வேண்டுமெனவும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது
மே29,2010 இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம், ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து விழுக்காடு வீதம் குறைந்து வருவதாக வாஷிங்டன் பல்கலைகழகத்தின் நலவாழ்வு குறித்த நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிவிக்கிறது.
1970ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான குழந்தை இறப்பு விகிதம் குறித்து 187 நாடுகளில் எடுத்த ஆய்வை வெளியிட்ட அந்நிறுவனம் இவ்வாறு கூறியது.
1990ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் குழந்தைகள் இறந்தனர், எனினும் இவ்வாண்டில் 77 இலட்சம் குழந்தைகள் இறப்பார்கள் என்று அறிவியலாளர் கூறுவதாக அந்த ஆய்வு மேலும் கூறியது.
உலக அளவில் 1990ம் ஆண்டிலிருந்து ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 35 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், இது ஆண்டுக்கு 2 விழுக்காடு வீதம் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சமய சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா. வல்லுனர்கள் விண்ணப்பம்
மே29,2010 பாகிஸ்தானில் இவ்வெள்ளியன்று, அஹமதியா சிறுபான்மை சமூகத்தின் குறைந்தது 70 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கும்வேளை, அந்நாட்டில் சமய சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.வின் மூன்று மனித உரிமை வல்லுனர்கள் பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளனர்.
சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் தொடர்ந்து கொலைமிரட்டல்களையும் பாகுபாடுகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் எதிர்நோக்குகின்றனர் என்று அந்த வல்லுனர்கள் இணைந்து ஐ.நா.பொதுச் செயலருக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
லாகூரில் சிறுபான்மை முஸ்லிம் மதப்பிரிவான அஹமதியா மதப்பிரிவு ஒன்றின் இரு மசூதிகளை ஆயுததாரிகள் ஒரே காலத்தில் தாக்கியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மொடல் டவுண் மற்றும் கர்ஹி சாகூ என்னும் இடங்களிலுள்ள மசூதிகளில் இத் தாக்குதல்கள் தொழுகை வேளையில் இரண்டு மணிநேரம் நடந்துள்ளன.
அஹமதி பிரிவு இஸ்லாமியர்கள் லாகூரில் பல தடவைகள் சுனி இன குழுக்களால் பல தடவைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளர்கள்.
அஹமதி மதப்பிரிவினர் தாம் இஸ்லாமியர்கள் என்று உரிமை கோருகின்ற போதிலும், அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் 1973ல் அறிவித்துள்ளதுடன், 1984ல் அவர்கள் தம்மை முஸ்லிமாக அறிவிக்கவோ அல்லது அடையாளப்படுத்தவோ முடியாது என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.

வாய் சுத்தம் இருதயத்துக்கும் நல்லது
மே29,2010 பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது இதய நலத்துக்கும் உதவுகிறது என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குபவர்களுடன் ஒப்பிடும்போது, அப்படி பல்துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை இரண்டு மடங்கு அதிகமாக எதிர்கொள்வதாக, பிரிட்டனில் இருக்கும் மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
பல் துலக்குவதற்கும், இதய நோய் மற்றும் பக்கவாத நோய்க்கும் இருக்கும் நேரடி தொடர்பு குறித்து விரிவான மருத்துவ ஆய்வுகள் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் முடிவின்படி, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை பல் துலக்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஒரு முறைகூட பல் துலக்காதவர்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் எழுபது சதவீதம் அதிகமிருப்பது தெரியவந்திருக்கிறது.
முறையாக பல் துலக்காததன் காரணமாக வாயில் புண்ணை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது, இரத்ததில் கலந்து இரத்த நாளங்களில் செல்லும்போது, அது இரத்தநாளங்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

No comments:

Post a Comment