Saturday, June 5, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 27.05.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்வி கற்பிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, எனினும் நாம் அதை விட்டுவிடக் கூடாது - திருத்தந்தை

மே 27, 2010 கல்வி கற்பிப்பது ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை, எனினும் நாம் அதை விட்டுவிடக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்தாலிய ஆயர்களிடம் இவ்வியாழனன்று கூறினார்.
தங்களது 61வது பொது அமர்வை நடத்திவரும் இத்தாலிய ஆயர்களுக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, ஆயர்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தங்களது மேய்ப்புப்பணி திட்டத்தில் கல்வியை முக்கிய தலைப்பாக எடுத்திருப்பது குறித்துப் பாராட்டினார்.
ஆசிரியர்கள், புதிய தலைமுறைகளுக்குச் சாட்சி சொல்வதற்கு உதவும் வகையில், கிறிஸ்தவ அனுபவத்தின் உண்மை, அழகு மற்றும் நன்மைத்தனத்தை நினைத்து வாழ்வதற்கு அவர்கள் வழி நடத்தப்படுமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இன்றைய இத்தாலிய சமுதாயம், இத்தகைய விழுமியங்களின் நிச்சயமற்றதன்மையினால் குறிக்கப்பட்டதாய் இருக்கின்றது என்றுரைத்த அவர், இது கலாச்சார மற்றும் ஆன்மீக நெருக்கடியின் அடையாளமாக இருக்கின்றது என்றும் கூறினார்.
வேலைவாய்ப்பின்மை நெருக்கடியின் எதிர்நிலை விளைவுகளைக் களைவதற்கு அரசு அதிகாரிகளும் பொதுநிலை அதிகாரிகளும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார் பாப்பிறை.

போலந்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டவர்க‌ளுக்கு திருத்தந்தையின் உதவி.

மே 27, 2010 போலந்து நாட்டில் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அந்நாட்டுத் திருச்சபைக்கு சிறப்பு நிதியுதவி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிப்பதாகவும், தாராள மனதுடன் உதவும் நிறுவனங்கள் மேலும் உதவ ஊக்கமளிப்பதாகவும் திருத்தந்தையின் இந்நடவடிக்கை உள்ளது என்றது திருப்பீடத்தின் “கோர் ஊனும்” அவை.
திருப்பீடத்தின் உதவி அமைப்பான “கோர் ஊனும்” மூலம் இந்நிதி உதவியை போலந்து ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் யோசேஃப் மிக்காலிக்குக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
போலந்தின் அண்மை பெருமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்துள்ளன.

திருத்தந்தைக்கான ஆதரவை வெளியிடும் சலேசிய சபை ஆயர்களின் கடிதம்.

மே 27, 2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டிற்கான தங்கள் ஆதரவின் உறுதிப்பாட்டை வெளியிடும் கடிதம் ஒன்றை திருப்பீடத்திற்கு அனுப்பியுள்ளனர் சலேசிய சபை ஆயர்கள்.
சலேசிய சபையின் 150வது ஆண்டு, புனித தொன் போஸ்கோவைத் தொடர்ந்து அச்சபையை வழிநடத்திய முத்திப்பெற்ற மைக்கல் ருவா இறந்ததன் நூறாமாண்டு, முதல் சலேசிய ஆ‍‍ய‌ரின் ஆயர் திருநிலைப்பாட்டின் 125ம் ஆண்டு ஆகியக் கொண்டாட்டங்களையொட்டி இத்தாலியின் தூரின் அருகேக் கூடிய ஏறத்தாழ 90 சலேசிய ஆயர்கள் இணைந்து இக்கடித்தத்தை திருத்தந்தைக்கு அனுப்பியுள்ளனர்.
திருத்தந்தையுடனும் திருச்சபையுடனும் நெருக்கத்தையும் அன்புறவையும் வெளிப்படுத்தும் இக்கடிதத்தில் சலேசிய ஆயர் என்ற வகையில் திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயும் கையெழுத்திட்டுள்ளார்.
இன்றையச் சூழல்களின் அக்கறைகளை திருத்தந்தையுடன் பகிர்ந்து கொள்வதாகவும், ஏழைகள், கைவிடப்பட்டோர் மற்றும் கிறிஸ்துவைப்பற்றி அறியாதோர்க்கு நற்செய்தியை அறிவிக்கத் தகுதி பெறும் பொருட்டு தங்கள் வாழ்வையும் திருச்சபையையும் புனிதப்படுத்துமாறு இறைவனை வேண்டுவதாகவும் அக்கடிதத்தில் கூறியுள்ளனர் சலேசிய ஆயர்கள்.

சூடானின் அரசியல் பதட்ட நிலைகள் குறித்து அச்சத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர்.

மே 27, 2010 சூடானில் இடம்பெறும் அரசியல் பதட்ட நிலைகள், வன்முறைகள் மீண்டும் திரும்ப வழிவகுக்கலாம் என அச்சத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
SPLA என்ற புரட்சியாளர்களும் சூடன் ராணுவமும் ஆயுத மோதல்களுக்குத் தயாராக உள்ள நிலையில் ஒரு சிறு பொறி கிளம்பினாலும், கடந்த உள்நாட்டுப் போர் காலத்தைப் போல் மக்கள் காடுகளில் அடைக்கலம் தேடவேண்டியிருக்கும் என்றார் ஆயர் மாக்ரம் காஸிஸ்.
கடந்த மாத அரசுத்தலைவர் தேர்தலில் ஓமர் அல் பஷீர் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அரசியல் பதட்ட நிலைகள் சூடானில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுத்தலைவர் ஓமர் அல் பஷீர் சூடான் நாட்டை இஸ்லாமிய ஷாரியா சட்ட ஆட்சி முறையின் கீழ் கொணரவேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் தொடர்ந்து செயல்படுவதாகவும் தங்கள் அச்சத்தை வெளியிட்டுள்ளனர் சூடான் ஆயர்கள்.
1983ம் ஆண்டு துவங்கி 2005ம் ஆண்டு முடிவுற்ற சூடான் உள்நாட்டுப் போரில் 19 இலட்சம் பேர் வரை உயிரிழந்தனர்.

மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்த மக்களுக்கான பல்மத ஜெப வழிபாடு.

மே 27, 2010 மங்களூரின் அண்மை விமான விபத்தில் உயிரிழந்த மக்களுக்காக ஜெபிப்பதற்கென பல்மத கூட்டம் ஒன்றைக் கூட்டியதுடன் சிறப்புத் திருப்பலி ஒன்றையும் நிறைவேற்றியது மங்களூர் த‌லத்திருச்சபை.
40 குருக்களுடன் ஆயர் அலோசியஸ் பால் டி சூஸா நிறைவேற்றியத் திருப்பலியில், இத்தகைய பேரிடர்களின்போது மதம் இனம் என்ற வேறுபாடு நோக்காமல் அனைவருக்கும் உதவவேண்டியது வலியுறுத்தப்பட்டது.
இவ்விமான விபத்தில் இறந்த மக்களுடன் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் ஒருமைப்பாட்டை அறிவித்துள்ளதாகக் கூறினார் ஆயர் அலோசியஸ் பால் டி சூஸா.
உயிரிழந்த 158 பேர்களின் நினைவாக மலர் வளையங்களை வைத்த மதத்தலைவர்கள், மெழுகுத் திரிகளுடன் பல்மதப் பாடல்களைப் பாடி ஜெபித்தனர்.

கிறிஸ்தவ எதிர்ப்பு ஸ்லோகங்கள் குறித்து பாகிஸ்தான் தலத்திருச்சபைக் கவலை.

மே 27, 2010 அண்மைக்காலங்களில் பாகிஸ்தானில் எழுந்துள்ள கிறிஸ்தவ எதிர்ப்பு ஸ்லோகங்கள் மற்றும் விளம்பரத் தட்டிகளால் ஆழ்ந்த அச்சம் கொண்டுள்ளதாக தலத்திருச்சபைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழல்களில் இறைவனின் பாதுகாப்பை நாடுவதாகவும் கிறிஸ்தவ எதிர்ப்பு விளம்பரத் தட்டிகள் விரைவில் அகற்றப்படும் என நம்புவதாகவும் கூறினார் லாகூர் பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா.
எற்கனவே பலமுறை கிறிஸ்தவக் கோவில்களையும் கிறிஸ்தவப் பணியாளர்களையும் தாக்கியுள்ள Khatm-e-Nabuwat அமைப்பு இந்தக் கிறிஸ்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை காரித்தாஸ் பணிகளுக்கு அமைச்சரின் நன்றி.

மே 27, 2010 இலங்கையின் 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியுள்ள காரித்தாஸ் உதவி நிறுவனத்தின் பணிகளுக்கென தன் நன்றியை வெளியிட்டார் அந்நாட்டு மீள்குடியிருப்புத் துறைக்கான அமைச்சர் மில்ரோய் ஃஃபெர்னாண்டோ.
கொழும்புவின் கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத்தை புதனன்று சென்று பார்வையிட்டு, கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பின் தொடர்ந்த ஒத்துழைப்பை வேண்டிய அமைச்சர், சுனாமியின் போதும் உள்நாட்டுப்போரின் போதும் இலங்கை கத்தோலிக்க காரித்தாஸின் அர்ப்பணப் பணி குறிப்பிடும்படியானது என்றார்.
போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் 1700 குழந்தைகளுக்கு காரித்தாஸ் அமைப்பு கல்விக்கான உதவிகளையும் உணவு உதவிகளையும் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment