வத்திக்கான் வானொலி – செய்திகள் 28.05.10
www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருத்தந்தை - உண்மையான சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கு இன்றியமையாதது
மே28,2010 உண்மையான சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாத கூறாகும் என்று பெனின் (Benin) நாட்டுப் புதிய தூதுவர் Comlanvi Théodore Loko விடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இவ்வெள்ளியன்று திருப்பீடத்துக்கான பெனின் நாட்டுப் புதிய தூதுவர் Loko விடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, உண்மையான சகோதரத்துவம், பிரிவினைகளைத் தகர்த்து தேசிய ஐக்கியத்தையும் குடும்பங்களில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
பெனின் நாட்டுக் கலாச்சார மரபுகள் குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவற்றில் முக்கியமானதாகிய வாழ்வின் தூய்மை காக்கப்பட வேண்டும், குறிப்பாக அது நாட்டின் சட்டங்கள் மூலம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
எல்லாக் குடிமக்களின் சமமாண்பையும் சகோதரத்துவத்தையும் காப்பது உறுதியான சமுதாயம் வளருவதற்கு அடிப்படையான கோட்பாடாகும் என்றும் சகோதரத்துவம், எப்பொழுதும் நீதியைக் கடைபிடிப்பதற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறினார் அவர்.
சகோதரத்துவம், நீதி, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் பெனின் நாட்டினர் எல்லாருக்கும் தமது வாழ்த்தையும் ஆசீரையும் வழங்குவதகாவும் புதிய தூதுவர் Lokoவிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின், 1872ல் ப்ரெஞ்ச் காலானியாக மாறி 1960ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி சுதந்திரம் பெற்றது.
சமுதாயத்தின் வருங்காலம் மக்களுக்கிடையேயான உறவுகள், நியாயமான வேறுபாடுகளின் தனித்துவங்களை மதித்தல் போன்றவற்றைப் பொறுத்தே அமைந்திருக்கிறது - திருத்தந்தை
மே28,2010 குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்வோர்க்கானத் திருப்பீட அவை நடத்திய மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குடியேற்றதாரரின் உரிமைகளையும் கடமைகளையும் ஏற்பதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
பொதுநலனையும் தனியாட்களை மதிப்பதையும் ஊக்குவிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சட்டங்கள், அமைதி, சகோதரத்துவம், எல்லாரின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகைக் கட்டி எழுப்புவதற்கு உதவுவதாய் அமைய வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.
உண்மையில், அமைதியான நல்லிணக்கத்துக்கான கூறுகள், விவேகமும் தெளிவான வழிமுறைகள் வழியாகப் பெறப்படலாம் என்றுரைத்தத் திருத்தந்தை, இவை குடும்பங்கள் ஒன்றிணைப்பு, அகதிகள், அடைக்கலம் தேடுவோரை ஏற்றல், மனித வியாபாரத்தைத் தடை செய்தல் போன்றவற்றுக்கு உதவுவதாய் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.
மக்களுக்கிடையேயான உறவுகள், கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல், நியாயமான வேறுபாடுகளின் தனித்துவங்களை மதித்தல் ஆகியவற்றைப் பொறுத்தே சமுதாயத்தின் வருங்காலம் அமைந்திருக்கிறது என்ற திருத்தந்தை, திருச்சபை ஒவ்வொரு குடியேற்றதாரருக்கு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பங்களின் ஒன்றிணைப்புக்காவும் உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
குடியேற்றதாரரின் தந்தை என அழைக்கப்படும் முத்திப் பேறுபெற்ற ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி இறந்ததன் 105ஆம் ஆண்டு வருகிற ஜூன் ஒன்றாந்தேதி சிறப்பிக்கப்படுகிறது, குடியேற்றதாரர் குறித்த உங்களின் பணிக்கு இப்புனிதர் தூண்டுதலாக இருப்பாராக என்று அப்பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மாவோயிஸ்ட் தாக்குதலுக்கு மேற்கு வங்காளத் திருச்சபைத் தலைவர்கள் கண்டனம்
மே28,2010 மேற்கு வங்காளத்தில் 65 பேர் இறப்பதற்கும் சுமார் 200பேர் காயமடைவதற்கும் காரணமான தொடருந்து வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
வன்முறை எந்த வடிவில் இடம் பெற்றாலும் திருச்சபை அதனைக் கண்டிக்கிறது என்றுரைத்த மேற்கு வங்காள ஆயர் பேரவைச் செயலர் ஆயர் தாமஸ் டி சூசா, இதில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் திருச்சபை தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கிறது என்றும் கூறினார்.
மேலும், இந்தத் தாக்குதல், மனிதக் குரூரத்தின் அடையாளமாக இருக்கின்றது என்று சொல்லி இதற்குத் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் இந்திய துறவு சபைகள் அவைச் செயலர் அருட்சகோதரர் Mani Mekkunnel.
மும்பையிலிருந்து கொல்கட்டா சென்று கொண்டிருந்த Gyaneshwari வேகத் தொடருந்து, மேற்கு வங்காளத்தின் மேற்கு Midnapore மாவட்டத்தில் அதன் 13 பெட்டிகள் இவ்வெள்ளி அதிகாலை 1.30 மணிக்கு தடம் புரண்டதில் 65 பேர் இறந்துள்ளனர் மற்றும் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று அரசும் பொது மக்களும் நம்புவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, கிராமங்களுக்கு எதிராக இடம் பெறும் கொடுமைகள், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கண்டித்து கறுப்பு வாரம் ஒன்றைத் தொடங்குவதாக மாவோயிஸ்ட்டுகள் அறிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையிலான மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவின் 28 மாநிலங்களில் குறைந்தது இருபதில் செயல்பட்டு வருகின்றனர். 2009ல் அரசு அவர்களை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டபின்னர், கடந்த ஆண்டில் இவர்களால் ஏறக்குறைய 600 பேர் இறந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையம், இந்திய தொழிலாளரின் கூட்டமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
மே28,2010 அமைப்புமுறைசாராத் தொழிலாளரின் நலன் கருதி இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையம், WIF என்ற இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
பெங்களூரில் இவ்வாரத்தில் நிறைவடைந்த மூன்று நாள் கருத்தரங்கில் இதைத் தொடங்கி வைத்து உரையாற்றிய இந்திய ஆயர் பேரவையின் தொழில் ஆணையத் தலைவர் ஆயர் ஆஸ்வால்டு லூயிஸ், இந்தியாவிலுள்ள 46 கோடித் தொழிலாளரில் 93 விழுக்காட்டினர் அமைப்புமுறைகளைச் சாராதவர்கள் என்றார்.
சட்டரீதியான மற்றும் சமூகப் பாதுகாப்பில்லாமல் இருக்கும் இவர்களின் நலன் கருதி இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக் கூறினார் ஆயர் லூயிஸ்.
இந்த WIF நிறுவனத்தின் தலைவராகத் தமிழகத்தின் திருவாளர் ராஜாமணியும் பொதுச் செயலராக கேரளாவின் திருவாளர் ஜோசப் ஜூடும், பொருளாளராக மகாராஷ்டிராவின் ஆல்வின் தேவாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனம் 120க்கு மேற்பட்ட மாவட்டங்களில் 8 மாநில மற்றும் 5 தேசிய இயக்கங்களை உள்ளடக்கியதாகும்.
இத்தாலியின் பிறப்பு விகிதம், வேலைவாய்ப்பின்மை குறித்து ஆயர்கள் கவலை
மே28,2010 இத்தாலியில் காணப்படும் மிகக் குறைவான பிறப்பு விகிதம் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாட்களாக நடத்திய தங்களது 61வது பொதுக் கூட்டத்தை இவ்வெள்ளியன்று நிறைவு செய்த இத்தாலிய ஆயர்கள், பிறப்பு நோய்த் தற்கொலை நோக்கி இத்தாலி மெது மெதுவாகச் சென்று கொண்டிருக்கிறது என்று எச்சரித்தனர்.
இன்று 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட இத்தாலியக் குடும்பங்களுக்கு குழந்தைகள் இல்லை, மேலும், ஏறத்தாழ பாதிக் குடும்பங்கள் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கின்றன, மற்ற குடும்பங்களில் இரண்டு குழந்தைகள் உள்ளன. 5.1 விழுக்காட்டு குடும்பங்கள் மட்டுமே மூன்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளையும் கொண்டிருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ(Angelo Bagnasco), சிறாரை மையமாகக் கொண்ட உடனடிக் கொள்கைகள் அவசியம் என்று கூறினார்.
வருங்காலச் சமுதாயத்தை விடுதலையாக்கும் புதுப்பித்தல் இடம் பெறுமாறு கேட்டுக் கொண்ட கர்தினால், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையேயான திருமணத்தின் முறிவுபடாதன்மையைக் கொண்ட குடும்பம் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் உரைத்தார்.
ஆப்ரிக்காவில் இடம் பெறும் மனித வியாபாரப் பிரச்னைகளை உலகினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஆயர்கள் நடவடிக்கை
மே28,2010 ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளில் இடம் பெறும் மனித வியாபாரப் பிரச்னைகளை உலகினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு அப்பகுதி ஆயர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
லெசோத்தோ, நமிபியா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாபுவே ஆகிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள், கடந்த வாரத்தில் Planet Waves என்ற குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனித வியாபாரம் குறித்த பிரச்னையைக் களைவதற்கானத் தங்களது ஒத்துழைப்புக்கு உறுதி வழங்கினர்.
வறுமை, பொருளாதாரச் சீர்குலைவு, சண்டைகள், குறைந்த ஊதியத்திற்கான வேலை போன்ற காரணங்களால் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளில் மனித வியாபாரம் அதிகரித்து வருவதாக ஆயர்கள் கூறியுள்ளனர்.
மொசாம்பிக் நாட்டிலிருந்து மட்டும் ஒரு வாரத்திற்கு 300 பேர் வீதம் தென்னாப்ரிக்காவுக்குச் சட்டத்துக்குப் புறம்பே நுழைகின்றனர்.
மேலும், வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை தென்னாப்ரிக்காவில் நடைபெறவிருக்கின்ற உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டின் போது சுமார் நாற்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளும் விபசாரிகளும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவார்கள் என்று திருச்சபை பயப்படுகிறது.
ஈரான் சிறைகளில் 470 மனச்சான்றின் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர்
மே28,2010 ஈரான் சிறைகளில் 470 மனச்சான்றின் கைதிகள் வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் மனித உரிமைகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
அரசியல் நடவடிக்கையாளர், மாணவர்கள், பத்திரிகையாளர், சிறுபான்மை மதத்தவர் உட்பட 470 மனச்சான்றின் கைதிகள் உள்ளனர், இவர்களில் குறைந்தது 268 பேருக்குத் தாங்கள் குற்றம் சாட்டப்பட்டதற்கான காரணம் தெரியாது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இக்கைதிகள் 39 பெண்கள் மற்றும் 28 ஆண்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் மனித உரிமைகள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
101 அரசியல் நடவடிக்கையாளர், 59 மாணவர்கள், 49 பத்திரிகையாளர், 43 சிறுபான்மை மதத்தவர் போன்றோர் இவர்களில் உள்ளடங்குவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment