Saturday, June 5, 2010

வத்திக்கான் வானொலி – செய்திகள் 31.05.10

www.vaticanradio.org
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருத்தந்தை - நாம் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, அது நம்மில் வாழும் மூவொரு கடவுளை நினைவுபடுத்துகின்றது

மே31,2010 நாம் சிலுவை அடையாளம் வரையும் பொழுது, நம்மில் வதியும் மூவொரு கடவுளையும், இறைவனின் பெயரையும் நாம் திருமுழுக்கு பெற்ற நேரம் முதற்கொண்டு விசுவாசத்திற்கு நம்மை அர்ப்பணித்திருப்பதையும் நினைவுபடுத்துகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
மூவொரு கடவுள் விழாவான இஞ்ஞாயிறன்று பகல் 12 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு, பாஸ்கா மறைபொருள்களிலுள்ள தந்தை, மகன், தூய ஆவி குறித்த கடவுளின் வெளிப்பாட்டை நினைவுபடுத்துகின்றது என்றுரைத்தார்.
ஒரே கடவுள், மூன்று ஆட்களாய் இருக்கிறார் என்பதை மனித எண்ணத்தாலும் மொழியாலும் போதுமான அளவு விளக்க முடியாமல் இருந்த போதிலும், திருச்சபைத் தந்தையர், தங்களது வாழ்வு மற்றும் ஆழமான விசுவாசத்தின் வழியாக விளக்க முயற்சித்திருக்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
உண்மையில், மூவொரு கடவுள், நாம் திருமுழுக்கு பெற்ற நேரம் முதல் நம்மில் வாழத் தொடங்குகிறார் என்று சொல்லி, தந்தை மகன் தூய ஆவியின் பெயரால் நான் உனக்குத் திருமுழுக்கு அளிக்கிறேன் என்று திருமுழுக்கு திருவருட்சாதன நேரத்தில் அருட்பணியாளர் கூறுவதையும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
திருச்சிலுவை அடையாளத்தை வரையும் ஒவ்வொரு நேரமும் நாம் திருமுழுக்குப் பெற்ற இறைவனின் பெயரை நினைவுகூருகிறோம் என்றும் கூறிய அவர், சிலுவை அடையாளத்திலும், வாழும் இறைவனின் பெயரிலும், விசுவாசத்தை உயிரூட்டம் பெறச் செய்யும் மற்றும் செபிக்கத் தூண்டும் கூறுகள் உள்ளன என்று கூறினார்.
இஞ்ஞாயிறோடு திருவழிபாட்டு ஆண்டின் பொதுக் காலம் தொடங்கியுள்ளது, இது, நமது கிறிஸ்தவ அர்ப்பணத்தைக் குறைத்துவிடக் கூடாது, மாறாக, திருவருட்சாதனங்கள் வழியாக இறைவாழ்வுக்குள் நுழைவதற்கு நம்மை நடத்திச் செல்கின்றது என்றார் அவர்.
கடவுளின் திருவருளுக்குத் திறந்த மனதுடையவர்களாய் இருக்கவும், இறைவன் மற்றும் பிறரன்பில் வளரவும் ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம் என்பதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

முத்திப்பேறு பெற்ற மரிய பியெரினா தெ மிக்கேலே கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது அசாதாரண பக்தி கொண்டிருந்தவர் - திருத்தந்தை

மே31,2010 மேலும், இஞ்ஞாயிறு காலை புனித மேரி மேஜர் (Mary Major) பசிலிக்காவில் முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட அன்னை மரிய பியெரினா தெ மிக்கேலே (Maria Pierina De Micheli), கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது கொண்டிருந்த அசாதாரண பக்தியை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் புகழ்ந்து பேசினார் திருத்தந்தை.
அமலமரிப் பதல்விகள் சபையைச் சேர்ந்த இந்தப் புனிதையின் வாழ்வு பற்றியும் பேசிய திருத்தந்தை, 1890ம் ஆண்டு இத்தாலியின் மிலானில் பிறந்த Maria Pierina De Micheli, தனது 23வது வயது தொடங்கி அவர் இறந்த 1945ம் ஆண்டு வரை அர்ஜெண்டினாவிலும் இத்தாலியிலும் கல்விப்பணிக்குத் தம்மை அர்ப்பணித்திருந்தார் என்றார்.
இவர் கிறிஸ்துவின் திருமுகத்தின் மீது கொண்டிருந்த அசாதாரண பக்தியை அவரது சோதனைகளிலும் நோயிலும் காண முடிந்தது என்றும் திருத்தந்தை கூறினார்.
உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் முதன்முறையாக இடம்பெற்ற இந்த முத்திப்பேறு பட்டமளிப்புத் திருப்பலியில், புவனோஸ் ஐரெஸ் (Buenos Aires) மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.
இத்திருப்பலியை நிகழ்த்திய, புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கானத் திருப்பீடப் பேராயத் தலைவர் பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ, இப்புனிதை இயேசுவின் திருமுகத்தைக் காட்சியில் கண்டது பற்றி விளக்கினார்.

அயர்லாந்திற்கான திருத்தந்தை‍யின் மேல்மட்ட திருச்சபை குழு

மே 31, 2010. திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட மேல்மட்ட திருச்சபை அதிகாரிகளின் குழு ஒன்று தலத்திருச்சபைக்கு ஆன்மீக ஆலோசனைகளை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலர் மீதான பாலின அத்துமீறல்களில் சில குருக்களும் துறவியரும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பல்வேறு சவால்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வரும் அயர்லாந்து தலத்திருச்சபையில் ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலை விசுவாசிகளுக்கு பல்வேறு வகை உதவிகளை வழங்குவது இக்குழுவின் நோக்கமாக இருக்கும் என்கிறது திருப்பீடச் செய்தித்துறை.
கர்தினால்கள் Cormac Murphy O'Connor, Sean Patrick ஆகியோரை உள்ளடக்கி, திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள இக்குழு, பாலர் மீதான பாலின அத்துமீறல் நடவடிக்கைகளிலும், வருங்காலக் குருக்களுக்கானப் பயிற்சியிலும் மேலான ஆலோசனைகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வரைச் சந்தித்தனர் ஆயர்கள்.

மே 31, 2010. ஆந்திர பிரதேச மாநில அரசுக்கும் அம்மாநிலக் கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே நிலவி வரும் உறவு குறித்து மாநில முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினர் ஆந்திர ஆயர்கள்.
புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு பயணச்சீட்டில் சலுகை காட்டுதல், கோவில் கட்டுவதற்கான நீதிமன்றங்களின் தடைகளை ஆராய்தல், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்த நடவடிக்கை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட ஆந்திர மக்களுக்கு 3000வீடுகளைக் கட்டிக்கொடுப்பதில் திருச்சபைக்கு அரசின் ஆதரவு ஆகியவை குறித்து முதல்வர் றோசய்யாவுடன் விவாதித்தனர் ஆயர்கள்.
தலித் கிறிஸ்தவர்களை மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகமாக அறிவிக்கும் மசோதாவை பாராளுமன்றத்தின் வரும் தொடரில் கொணரவேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்துமாறும் மாநில முதல்வரை விண்ணப்பித்தனர் ஆயர்கள்.
ஆந்திர முதல்வரும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கென ஆந்திர அரசு ஆற்றிவரும் பணிகளைக் கோடிட்டுக் காட்டியதோடு, சிறுபான்மை சமுதாய மேம்பாடு என்ற அடிப்படையில் கிறிஸ்தவப் பள்ளிகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதற்கும் உறுதி கூறினார்.

மணிப்பூர் பொருளாதாரத் தடைகளுக்குத் தீர்வு காண கிறிஸ்தவ சபைகளின் முயற்சி.

மே 31, 2010. மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து இருந்து வரும் பொருளாதாரத் தடைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் அம்மாநில முதல்வரைச் சந்தித்தனர் மணிப்பூர் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள்.
மாவட்ட அவைகளுக்கு போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை என மாவட்ட அவைத் தேர்தல்களை எதிர்க்கும் நாகா மாணவர் இயக்கம் சில சாலைகளை மறித்து பொருளாதாரத் தடைகளை ஏப்ரல் மாதம் 11ந்தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தீர்வு காண அரசுத்தலைவரைச் சந்தித்துள்ளன கிறிஸ்தவ சபைகள்.
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணலாம் என்ற தங்கள் ஆலோசனையை ஏற்று நாகா குழுக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முதல்வர் Okram Ibobi Singh உறுதியளித்துள்ளதாகவும் கூறினர் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.

அமெரிக்காவில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு கத்தோலிக்க உதவி.

மே 31, 2010. மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை வழங்கி வருகின்றன கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புகள்.
மெக்ஸிகோ வளைகுடாவில் ஏப்ரல் மாதம் 20ந்தேதி இடம்பெற்ற ஆழ்கிணறு எண்ணெய் ஆய்வு மைய விபத்தினால் கடல் நீர் பெருமளவில் அசுத்தமாகியுள்ளதைத் தொடர்ந்து மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி வருகின்றன கத்தோலிக்க உதவி அமைப்புகள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுள் ஏறத்தாழ 4645 பேர் இதுவரையில் ஏதாவது ஒருவகையில் இக்கத்தோலிக்க பிறரன்பு நிறுவனங்களிடமிருந்து உதவிகளைப் பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் லூயிசியானா, அலபாமா மற்றும் மிஸிஸிப்பி மாநிலங்களில் மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் 250 கோடி டாலர் இழப்பு ஏற்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கக் குருக்களை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளது சைன அரசு.

மே 31, 2010. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதால் மறைந்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சைனக் கத்தோலிக்கத் திருச்சபையின் இரு குருக்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளது சைன அரசு.
குருக்கள் Joseph Wang Jianchenம் Joseph Li Deயும் திருப்பலி நிறைவேற்றச் சென்று கொண்டிருந்த வழியில் இஞ்ஞாயிறு காலை காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
குரு லி ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டவர்.
திருத்தந்தைக்கு விசுவாசமாக இருப்பதாலும், அரசின் கீழ் இயங்கும் சைனத் தேசியக் கத்தோலிக்க சபையில் இணைய மறுப்பதாலும் பல குருக்கள் சைன அரசால் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படுவது தொடர்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிரந்தர தியாக்கியோன்களின் எண்ணிக்கை உயர்வு.

மே 31, 2010. குருத்துவ திருநிலைப்பாட்டைப் பெறும் எண்ணமின்றி நிரந்தரத் தியாக்கியோன்களாகவே இருக்க விரும்புபவர்களின் எண்ணிக்கை அமெரிக்க ஐக்கிய நாட்டில் தற்போது 17 ஆயிரத்து 47 எனவும் இதில் ஏறத்தழ 90 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் எனவும் அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.
நிரந்தரத் தியாக்கியோன்கள் என்பவர்கள் பங்குத் தளங்களில் குருக்களுக்கு மேய்ப்புப் பணி நடவடிக்கைகளில் உதவி வருகின்றனர்.

No comments:

Post a Comment